பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே - அப்பர்
குரு பகவானுக்கும் குருவாக கல்லால மரத்தின் கீழ் உபதேசித்த சிவபெருமானுக்கும், சிவனால் மனங்குளிர உபதேச மந்திரம் உபதேசித்த முருகப் பெருமானுக்கும் இப்பூசநாள் உகந்தது. இம்மாதிரி ஒரு தைப்பூச நாளில்தான் நடராஜப் பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாதருக்குத் தமது திருக்கூத்தை காட்டியருளினார்.
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை
ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
தைப்பூசமும் வடலூரும்
ஆண்டு தோறும் தைப்பூசம் திருவிழா நாளில் விடுமுறை விடப்படும் வகையில் பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க முதல்வர் உத்தரவிட்டார். ஆண்டாண்டு காலமாய் தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம். மற்ற மாதங்களில் வரும் பூச நட்சத்திரங்களைவிட தை மாதத்தில் வரும் பூச நட்சத்திற்கு சிறப்பான "நட்சத்திர அந்தஸ்து" உண்டு.
காரணம் பல ஆன்மிக அற்புதங்கள் இந்த நன்னாளில் நிகழ்ந்திருக்கின்றன. பண்டைக்கால தமிழகத்தில் தைப்பூசத்தன்று புனித நீராடுதல் மிகுந்த பக்தி உணர்வோடு கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.
"'பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே'' என்று தைப்பூசத் திருநாளன்று நீராடுவது பற்றி அப்பர் பாடுகிறார். மயிலையில் தைப்பூச விழா
கொண்டாடியது பற்றியும் அப்போது அன்னதானம் செய்தது பற்றியும் ஞானசம்பந்தர் தேவாரத்தில், (சம்பந்தர் தேவாரம், திருமயிலைப் பதிகம், பா.எண். 5)
"மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம மர்ந்தான் நெய்ப்பூசு மொன்புழுக்க னேரிழையார் கொண்டாடும் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்'' என்று குறிப்பிடுகின்றார். தைப்பூசத் திருவிழாவைக் கண்ணாறக் கண்டு களித்தல் முக்கியமானது என்று உணர்த்துகிறது இந்தப் பாடல்.
தைந் நீராடுதல் பூச நட்சத்திரம் கூடிய நன்னாளில் கொண்டாடப்படுகிறது. நட்சத்திரங்களின் தலைவனாக புராணங்களில் சொல்லப்படும் பிரஹஸ்பதி என்னும் தேவ குருவை பூஜிப்பதாகக் கொள்வர். பிரஹஸ்பதி அறிவின் தெய்வமாகக் கருதப்படுபவர். எனவே தைப்பூசத்தன்று புனித நீர் நிலைகளில் நீராடி குருவை வழிபட கல்வி - கேள்வி - ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
தைப்பூசத் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது என்பது பல கல்வெட்டுகளால் நமக்குப் புலனாகிறது.
திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூசம் சிறப்பாக நடந்ததை கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
தஞ்சை மாவட்டம், திருவேடிக்குடியிலுள்ள வேதபுரீசுவரர் கோயில், திருவடி பஞ்சநதிசுவரன் கோயில் ஆகியவற்றிலும் தைப்பூசம் சிறப்பாக நடைபெற்றதையும், அதற்கு நிலங்கள் தானமாக அளிக்கப்பட்ட செய்தியையும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
தைப்பூச நாளன்று நீராடி இறைவனை வழிபட பேய், ஆவி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இதுபற்றி வழங்கப்படும் புராணக் கதை திருவிடைமருதூர் அருகில் பிரபலம்.
சோழநாட்டை அம்சத்வசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் ராஜ்ய பாரக் கடமைகளால் அது நிறைவேறவில்லை. எனவே தனக்கு பதிலாய் வேதம் அறிந்த ஓர் அந்தணருக்கு பெரும் பொருள் உதவி செய்து தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி வைத்தான். அவர் திரும்பி வரும் வரை அவரது குடும்பத்துக்குத் தேவையான பொருளுதவியையும் அளித்து வந்தான்.
பல நாள்கள் கழிந்தன. மாறுவேடம் பூண்டு நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய மன்னன் அப்படியே அந்த அந்தணரது குடும்பம் எப்படி இருக்கிறது என்றும் பார்க்கலாம் என்று போய்ப் பார்த்தான். வீட்டில் யாரோ ஒருவன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அரசன், கோபாவேசமாக வீட்டிற்குள் புகுந்து அந்த நபரைக் குத்திக் கொன்றான். அதன்பிறகே தனக்காக தீர்த்த யாத்திரை சென்ற அந்தணர்தான் என்பதை அறிந்து திடுக்கிட்டான். அந்தப் பாவம் தன்னை பீடிக்குமே என்று அஞ்சினான். அதற்கு ஏற்றாற்போல் கொலையுண்ட அந்தணரின் ஆவி அரசனை இரவிலும் பகலிலும் துன்புறுத்தியது. அந்தப் பாவத்தைப் போக்க தீர்த்த யாத்திரையாக பல தலங்களுக்கும் சென்றான். இறுதியாக திருவிடைமருதூர் வந்தான். கோயிலுக்குள் உள்ள தீர்த்தத்தில் நீராடினான். என்ன ஆச்சரியம்..! அந்தணர் ஆவி அவனை விட்டு நீங்கியது. அவ்வாறு அந்த ஆவி நீங்கிய நாள் தைப்பூசத் திருநாள். இதையறிந்த மன்னன் அக்கோயிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற பெரும் நிதியுதவி செய்தான்.
இதேபோல் இன்னொரு கதையும் பிரபலம்.... மதுரையை ஆண்ட வரகுண பாண்டியன் குதிரையில் வேகமாக வந்துகொண்டிருந்தான். அப்போது வயதான பிராணமர் ஒருவர் அந்த நேரம் தெருவைக் கடக்க முயல, குதிரையில் அடிபட்டு உயிரிழந்தார்.
அந்தப் பாவத்திலிருந்தும் ஆவியின் பிடியிலிருந்தும் விடுபட நினைத்த மன்னன் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டான். இறுதியில் திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் விடிமோட்சம் பிறக்கும் என்று கூறினர். ஆனால் பாண்டியனுக்கு சோழநாட்டுக் கோயிலுக்குச் சென்று வழிபட மனம் வரவில்லை. எனவே சுந்தரேஸ்வரரை வேண்டினான். "இன்னும் கொஞ்ச நாளில் சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வருவான்; உன்னிடம் மோதுவான்; ஆனால் தோற்றுவிடுவான். திரும்பி ஓடுவான். நீ அவனைத் துரத்திக்கொண்டு சோழ நாட்டிற்குச் செல். அப்போது திருவிடைமருதூர் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்'' என்றார் சுந்தரேஸ்வரர் இறைவன் சொன்னபடியே எல்லாம் நடந்தன. சோழனைத் துரத்திய பாண்டியன் திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றான். என்ன ஆச்சரியம்! அவன் கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டதும் அவனை பிடித்திருந்த ஆவி விலகியது. இந்த அற்புதம் நடந்ததும் தைப்பூசத்தன்றுதான்.
ஒரு தைப்பூசத் திருநாளில்தான் திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை எழுப்பினார். இன்றும் தைப்பூசத்தன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த வைபவம் தைப்பூசத்தன்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
சூரபத்மனை அழிக்க முருகப் பெருமானுக்கு அன்னை பார்வதி சக்திவேல் கொடுத்து ஆசிர்வதித்ததும் ஒரு தைப்பூச நாளில்தான்.
தைப்பூச நாளன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாதது. காரணம், தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்த ஸ்ரீகாந்திமதிக்கு நெல்லையப்பர் அருள்பாலித்த நாள் ஒரு தைப்பூச நாளே.
எல்லாவற்றும் மேலாக 19ஆம் நூற்றாண்டில் வள்ளலார் நிகழ்த்திய அற்புதம் எவரையும் பிரமிக்க வைக்கும். வள்ளல் பெருமான் சித்திவளாகக் கூடத்தில் அமர்ந்திருந்த அன்பர்களை பெருங்கருணையோடு நோக்கி,
"அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வழிபட்டு உய்யுங்கள்'' என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார். பின் இரண்டரை நாழிகை அளவில் அருட் பெருஞ்சோதியாகிய ஆண்டவனோடு ஐக்கியமாகி விட்டார். அன்றும் தைப்பூசத் திருநாளே.
பழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகிறார்கள். இவ்வாறு பாத யாத்திரை செல்வதால் பக்தர்களுக்கு ஆன்ம பலமும், உடல் நலமும் ஒருங்கே பெருகுகிறது. மன உளைச்சல் அகன்று உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது.
தைப்பூச நாளில் முதல் முறையாக ஜோதி வழிபாட்டை வடலூரில் தொடங்கி வைத்தார். அதன்பின் அந்த ஜோதியிலேயே ஐக்கியமானார். அன்று முதல் இன்று வரை தைப்பூச தினத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி ஜோதி தரிசனம் செய்கிறார்கள். தைப்பூசத்தின் சிறப்புகள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார். நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்குகிறோம்.
தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கிறோம். ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும். தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு. பூச நட்சத்திர நாள் காவடி பிரியன் கந்தனுக்கு மிகவும் விசேஷமான நாள். இந்நாளில்தான் முருகப் பெருமான் வள்ளியை மணமுடித்தார். தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கிய நாள்.
இந்நாளில் அனைத்து முருகன் ஸ்தலங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த நாளை காணிக்கை செலுத்தும் நாளாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.
பழங்கள், நெல், காய்கறிகள் எது விளைந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே காவடிகளில் அவற்றை வைத்து எடுத்து செல்வார்கள். ஆடு, மாடு, கோழி, சேவல், மயில் போன்ற ஜீவராசிகளை கோயிலுக்கு அர்ப்பணித்தல், நேர்ந்து விடுதல் போன்ற வழிபாடுகளை தைப்பூச நாளில் நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் உடலை வருத்தி நடைபயணம் மேற்கொண்டு முருகப் பெருமானை தரிசிப்பார்கள். தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும், மருதமலை, சிக்கல், வயலூர், குன்றக்குடி, வல்லக்கோட்டை, திருப்போரூர், குன்றத்தூர், வடபழனி என அனைத்து முருகன் கோயில்களிலும் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். சென்னை கந்தகோட்டத்து முருகப் பெருமானை துதித்து வள்ளலார் பாடிய பாடலை இந்த நன்னாளில் நாமும் பாடி சகல நலன்களும் பெறுவோம்.
ஒருமையுடன் நினதுதிரு மலர்
ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
- திருவருட்பா: ராமலிங்க அடிகள்
தைப்பூசத் திருநாளில் ஜோதி வழிபாடு போற்றப்படும் திருத்தலம் வடலூர் ஆகும்.
"பசித்திரு, தனித்திரு, விழித்திரு' என்ற வரிக்கு ராமலிங்க வள்ளலார் கூறும் விளக்கம்:
பசித்திரு என்பது உடல்பசியைக் குறிப்பதல்ல;
ஆன்மிகப்பசி. தனித்திரு என்பது தனியே
அமர்ந்து இறைவனை தியானம் செய்வதாகும்.
பசித்திருந்தும் தனித்திருந்தும் அடையும் பேரின்ப நிலையைத் தக்கவைத்துக்கொள்வதே விழித்திருக்கும் நிலையாகும்.
ராமலிங்க அடிகளார் கூறிய பத்துக்கட்டளைகள் எக்காலத்துக்கும் பொருந்தும். அவை:
தான் நன்றாக இருக்கவேண்டும் என்று
நினைப்பவர்கள், அதற்கேற்ப தங்கள் செயல்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும். ("உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்' என்று திருமந்திரம் சொல்லும். இதுவே வள்ளலார் காட்டும் முதல்படி.
தன்னைச் சுற்றியுள்ள எல்லாரும் மகிழ்ச்சியாக வாழவேண்டுமென்று எண்ணுவது.
உலகமெல்லாம் இன்பமாக வாழவேண்டுமென்று நினைப்பது.
ஆறறிவு மனிதர்கள் மட்டுமல்ல; ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள் அனைத்தும் வாழவேண்டும்; கொல்லாமை வேண்டும்.
பறவைகள், ஊர்வனமீது அன்புகாட்டி உதவுவது, ஆகாரமிடுவது. புழுவுக்கும் நீர்வாழ் மீனுக்கும் இரக்கம் காட்டுவது. ஓரறிவுடைய பயிர்கள் வாடுவது கண்டு வருந்துவது; அது வாடாமல் இருக்க வழிவகுப்பது. எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் எண்ணுதல்; எவ்வுயிர்த்திரளும், என்னுயிர் என்று எண்ணுவது. ஓரறிவு உயிர்களிடத்தும் அன்புகொண்டு அதற்காகத் தியாகம் செய்வது.
எல்லா உயிர்களிடத்தும் இறைவன் இருக்கிறான் என்று எண்ணி தொண்டு செய்வது; அதற்காக வாழ்வதே இறைவழிபாடென்று நினைப்பது.
அன்பே வடிவான இறைவனோடு இரண்டறக் கலப்பது.
இந்தப் பத்துப்படிகளை அருளிய வள்ளலார் சுவாமிகள் ஞானசபை நிறுவி, அன்னதானப் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஞானவள்ளல்.
"கடவுள் ஒருவரே, அவர் ஜோதிமயமானவர்'
என்று அருளிய அருட்பிரகாச ராமலிங்க அடிகளார், ஸ்ரீமுக வருடம், தை மாதம் 10-ஆம் தேதி (30-1-1874) வெள்ளிக்கிழமை தைப்பூச நன்னாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு ஜோதியில் இரண்டறக் கலந்தார் என்று வரலாறு கூறுகிறது. அவர் ஜோதி வடிவத்தை அடைந்ததைக் காட்டும்விதத்தில் வடலூர் திருத்தலத்தில், தைப்பூசத்திருநாளன்று தரிசன வைபவம் நடைபெறும்.
வடலூரிலுள்ள சத்திய ஞானசபையில்- அவர் ஏற்றிய விளக்கு அணையாவிளக்காக ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது. தை மாதம் முதல் நாளிலிருந்து- அதாவது உத்தராயன காலத்தில், வான்வெளியில் சூரியன் தன் பயணத்தை மாற்றிக்கொள்கிறான். வடகிழக்காகப் பயணிக்கும் சூரியனின் பிரகாசம் இக்காலக்கட்டத்தில் அதிகரித்து மிகப்பிரகாசமாக இருக்கும் என்று வேதம் சொல்கிறது; அறிவியலும் அதை ஏற்கிறது. தைப்பூச நன்னாள் பௌர்ணமி தினத்தில்தான் வரும். அன்றைய தினம் "காஸ்மிக் எனர்ஜி' எனப்படும் மெய்காந்த அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பர்.
தைப்பூச நன்னாளில் அதிகாலையில் கிழக்கில் சூரியனும், மேற்கில் முழுநிலவும், ஞானசபையில் நடுவில் உள்ள ஜோதியும் ஒரே நேர்கோட்டில் அமையும். இந்த அதிசயம் தைப்பூசத்தில் மட்டும் நிகழும். இதனை அறிவியல் ஆய்வாளர்கள் உண்மை என்று உறுதியளிக்கிறார்கள்.
அறிவியல்ரீதியாக அமைக்கப்பட்ட இந்த ஞானசபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப்புறம் சிற்சபையும் உள்ளன. பஞ்சபூதத் தத்துவங்களைக் குறிக்கும் ஐந்துபடிகளைக் கடந்தால் ஒரு சதுர பீடம் உள்ளது. அந்த பீடத்தில்தான் வள்ளலார் ஏற்றிவைத்த தீபம் (ஜோதி) தரிசனம் தருகிறது. அதன்முன் ஏழடி உயரம், நான்கடி அகலம் கொண்ட நிலைக்கண்ணாடிக்கு முன்னால் ஏழு திரைகள் உள்ளன.
கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்வண்ணம், வெள்ளை ஆகிய நிறங்களில் ஆறு திரைகளும்; இவையனைத்தும் கலந்த வண்ணத்தில் ஏழாவது திரையும் உள்ளன.
ஆறு வண்ணங்களில் கருப்பு- மாயையையும்;
நீலம்- உரிய நோக்கங்களுக்கு ஏற்படும் தடையையும்; பச்சை- எல்லா உயிர்களுக்கும் அன்பு, கருணை உண்டு என்பதை அறியாதிருத்தலையும்; சிவப்பு- உணர்ச்சிகளை சீரமைக்காததையும்; பொன்னிறம்- ஆசையால் உண்டாகும் துன்பத்தையும்; வெள்ளை-
அகங்காரத்தையும்; இந்த ஆறு வண்ணங்களும் இணைந்த ஏழாவது திரை உலகப்பற்றுகளை சீரமைத்தல் என்ற தத்துவ உண்மைகளையும் உணர்த்துகின்றன என்பர்.
இந்த ஏழு திரைகளையும் விலக்கினால் ஜோதி தரிசனம் முழுமையாகக் கிட்டும். ஒவ்வொரு மாதத்திலும் பூச நாளில் ஆறு திரைகள் முழுவதும் விலக்கப்படும். ஏழாவது திரை மட்டும் பாதியளவு விலக்குவர். ஜோதி தரிசனம் முழுமையாகக் கிடைக்கும் நாளன்று ஏழு திரைகளும் விலக்கப்பட்டு ஆறு காலபூஜை நடைபெறும். அந்நாள் தைப்பூசமாகும்.
அருட்செல்வர் ராமலிங்க அடிகளார் ஏற்படுத்திய ஒளிக்கோவிலில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. 23-5-1867-ல் இங்கு தருமசாலை அமைத்து அன்னதானத்தைத் தொடங்கினார் வள்ளலார்.
இதற்காக அவர் ஏற்றிவைத்த அடுப்பு இன்றும் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது இந்த அடுப்பு 21 அடி நீளம், இரண்டரை அடி அகலம் மற்றும் ஆழம் கொண்டது. இங்கு தினமும் காலை ஆறு மணி, எட்டு மணி, பகல் பன்னிரண்டு மணி, மாலை ஐந்து மணி, இரவு எட்டு மணி என ஐந்து முறை அன்னதானம் நடைபெறுகிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.
பூச நட்சத்திரத்தின் பிரதான தேவதை குரு பகவான் என்று ஜோதிடநூல் கூறுகிறது. கோள்களில் ஞானம் தரும் தெய்வம் குரு பகவான். அதுபோல பூச நட்சத்திர நாட்களிலும் தை மாத பூச நட்சத்திரம் மிகவும் சக்திவாய்ந்தது எனப்படுகிறது. ஆதலால் தைப்பூசத் திருநாளில் புனித நீராடுவதும், குரு பகவானாகிய பிரகஸ்பதியையும், தட்சிணாமூர்த்தி கடவுளையும் தியானித்து வழிபடுவதன் மூலம் கல்வி, கேள்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
சந்திரன் கடகத்தில் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் பூச நட்சத்திரத்தில் இருந்து மகர ராசியில் இருக்கும் சூரியனை பார்க்கும் நாளே தைப்பூசம். சக்தியின் வெளிப்பாடும் தெய்வாம்சமும் பொருந்திய காலம் தைமாதம். தைப்பூச நாள் சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த நாளாகும். மேலும், ஆன்மீக ஜோதி வள்ளலார், அருட்பெருஞ்சோதியில் கலந்து மகா சமாதியான நாளும் இந்நாள்தான். தீப தரிசனம், ஜோதி தரிசனம் என்பது இந்துக்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்று.
தினசரி கோயிலுக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் வீட்டில் காலை, மாலை இரு வேளையும் காமாட்சியம்மன் விளக்கு அல்லது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அந்த ஜோதியை வணங்குவது பல காலமாக உள்ள சாஸ்திர சம்பிரதாய வழக்கமாகும். ஆலயத்தில் இறைவனை தரிசித்த பின்னர் கற்பூர ஜோதியை வணங்கி கண்களில் ஒற்றிக் கொள்வது ஆலய வழிபாடுகளின் முக்கிய அம்சமாகும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனத்தையும், இறைவன் ஜோதி சொரூபமாக உள்ளான் என்பதையும், அன்னதானத்தின் மகிமையையும் உணர்த்தியுள்ளார்.
மேலும் மரணமில்லா பெருவாழ்வு அடைந்து மீண்டும் பிறவாமல் இருக்க போதனை செய்துள்ளார். 25-1-1872 அன்று தைப்பூச நாளில் முதல் முறையாக ஜோதி வழிபாட்டை வடலூரில் துவங்கி வைத்தார். அதன்பின் அந்த ஜோதியிலேயே ஐக்கியமானார். அன்று முதல் இன்று வரை தைப்பூச தினத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி ஜோதி தரிசனம் செய்கிறார்கள்
வாழ வழிகாட்டும் வள்ளலார்!
தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் கடலூருக்கு அருகே அமைந்திருக் கும் கிராமம் மருதூர். இந்த ஊரின் கணக்குப்பிள்ளை யாகவும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமையா. இவர் மனைவி பெயர் சின்னம்மை.
ராமையா&சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் ஞாயிறு மாலை 5.54 மணியளவில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர்.
ராமலிங்கம் பிறந்த ஆறாவது மாதத்தில் தந்தை ராமையா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார். புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தார்.
சபாபதியே, தம்பி ராமலிங்கத்துக்குக் கல்வி கற்பித்தார். பிறகு, தான் பயின்ற காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயில அனுப்பினார்.
ஒருகட்டத்தில் மீண்டும் சென்னைக்கே வந்த ராமலிங்கம் அடிக்கடி கந்தசாமி கோயிலுக்குச் சென்றார். கந்தகோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சியடைந்தார். இளம்வயதிலேயே இறைவன்மீது பாடல்கள் இயற்றிப் பாடினார்.
பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோயில்களில் சுற்றிவந்த ராமலிங்கத்தை அண்ணன் சபாபதி கண்டித்தார். ஆனால், ராமலிங்கம் அவருக்குக் கட்டுப்படவில்லை. எனவே, அண்ணன் தன் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம் ராமலிங்கத்துக்குச் சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கிய ராமலிங்கம், வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.
ராமலிங்கத்துக்கு வீட்டில் மாடியறை ஒதுக்கப்பட்டது. புத்தகங்களோடு அவர் மாடியறைக்குச் சென்றார். சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சியளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.
புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை.
எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.
அன்றைய தினம் சபாபதியின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்த னர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம் வற்புறுத்தினர். எனவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்தார்.
அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.
ராமலிங்கம் தன் பன்னிரண்டாம் வயதில் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அவர் வசித்துவந்த ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே சென்று வழிபட்டு வருவது அவர் வழக்கம்.
பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்துகொண்டார். ராமலிங்கம் அமைதியை நாடியவர். கடவுள் என்றால் என்ன என்று அறிய விரும்பியவர். எனவே, 1858 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை அடைந்தார்.
அங்கே அவரைக் கருங்குழி கிராமத்து மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் சந்தித்துத் தன் ஊரில், தன் இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப்பட்ட ராமலிங்கம் மணியக்காரரின் இல்லத்தில் ஒன்பது வருடங்கள் தங்கியிருந்தார்.
ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப்படுத்தி எண்ணெய் நிரப்பிவைக்க மறந்துபோனார்.
அன்றிரவு ராமலிங்கம் வெகுநேரம் எழுதிக் கொண்டிருந் தார். விளக்கில் ஒளி மங்கும்போதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று கருதி விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது!
கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865ஆம் ஆண்டு ராமலிங்கம் "சமரச வேத சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை "சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்" என்று மாற்றியமைத்தார். இந்தப் புதிய சங்கத்தின் கொள்கைகளாக அவர் அறிவித்தவை, மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள். அவை:
கடவுள் ஒருவரே.
கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவில் வழிபட வேண்டும்.
சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது.
மாமிச உணவை உண்ணக்கூடாது.
ஜாதி, மத வேறுபாடு கூடாது.
பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும்.
பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்புமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங் களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த ராமலிங்க அடிகள், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.
வள்ளலார் பிறந்த இடம்
கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867 ஆம் ஆண்டு, மே மாதம் 23 ஆம் தேதியன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை எனப் பெயர் மாற்றம் செய்தார்.
இந்தத் தருமச்சாலையில் மக்கள் வழங்கும் பொருள் உதவியைக் கொண்டு சாதி, மத, மொழி, இன, நிறப் பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்கிறது.
ராமலிங்க அடிகள் வள்ளலார் என அழைக்கப்படலானார். வேட்டவலம் ஜமீன்தாரான அருணாசல வசந்த கிருஷ்ண வாணாதிராய அப்பாசாமி பண்டாரியார் (கொஞ்சம் நீளமான பெயர்தான்!) என்பவருக்கு இரு மனைவியர்.
வள்ளலார் தண்ணீரால் விளக்கேற்றிய வீடு
ஒருவரை நோயும் இன்னொருவரைப் பேயும் பிடித்துத் துயரப்படுத்தி வந்தன. பல்வேறு மருந்து, மந்திர பூஜைகளுக்குப் பிறகு கடைசியாக வள்ளலார் வேண்டி அழைக்கப்பட்டார். வேட்டவலம் ஜமீன்தார் இல்லத்தில் வள்ளலார் அடி வைத்ததும் பேய் விலகியது. அவர் தம் திருக்கரத்தால் மருந்து அளித்ததும் நோய் இறங்கியது. இதன்பிறகு, வேட்டவலம் அம்மன் கோயிலில், வள்ளலார் சொல்படி உயிர்ப்பலி நிறுத்தப்பட்டு, பால் பொங்கலிட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
வள்ளலாரின் புகழ் நாடெங்கும் பரவியது. அவரைச் சுற்றிக் கூட்டம் பெருகியது.
தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிலிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்களாக உபயோகப் படாமல் இருந்துவந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். தாம் தங்கிய அந்த இடத்துக்கு சித்தி வளாகத் திருமாளிகை என்றுபெயர் சூட்டினார்.
தண்ணீரால் விளக்கேற்றிய இடம் இதுதான் (வீட்டின் உள்ளே) அங்கே அவர் அடிக்கடி பிரமதண்டிகா யோகம் செய்து வந்தார். இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து தியானத்தில் இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றித் தம் தேகத்தை அக்னி தேகமாக்கி வந்தார்.
இறைவனை ஒளி வடிவாகப் போற்றிய வள்ளலார், சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஓர் ஒளித் திருக்கோயிலை 1871 ஆம் வருடம் அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் "சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை" என்று பெயர் சூட்டினார்.
கல்பட்டு ஐயா திருச்சந்நிதி
25.1.1872, தை மாதம் 13|ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது.
20.10.1873, செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணிக்கு சித்திவளாகத் திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு நீண்ட அருளுரை வழங்கினார் வள்ளலார். அந்த அருளுரையே "பேருபதேசம்" என்று சொல்லப்படுகிறது.
கொடியேற்றியதற்கு அடுத்த கார்த்திகை மாதம், திருவண்ணாமலை தீபத் திருநாளில், தமது அறையில் எப்போதும் எரிந்துவந்த தீப விளக்கைச் சித்திவளாகத் திருமாளிகையின் முன்புறம் எடுத்து வைத்தார்.
மக்களிடம் தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொல்லிவிட்டு, ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால், தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் கண்டு ஆராதியுங்கள். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்துகொள்வேன் என்று செய்தி அளித்தார்.
1874 ஆம் வருடம் தை மாதம் 19 ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்தார். அவரது விருப்பப்படி, அவரது பிரதம சீடர்களான கல்பட்டு ஐயாவும் தொழுவூர் வேலாயுதமும் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.
கல்பட்டு ஐயா சந்நிதி & வெளிப்புறம்...
அன்று முதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல், அருவமாக நிறைந்து, அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
சத்திய ஞானசபை
உலகில் வேறெங்கிலும் இல்லாத தனிப்பெரும் அமைப்பு இது. ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் வந்து பிரார்த்தனை செய்யத் தகுந்த இடம் இது. எண்கோண வடிவிலான இந்தக் கட்டடத்தை வள்ளலாரே வடிவமைத்தார். மையத்தில் நான்கு தூண்களைக் கொண்ட மண்டபமும் அதன்மீது பன்னிருகால் மண்டபமும், ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. நாற்கால் மண்டபத்தின் மையத்தில்தான் ஆண்டவர் ஜோதி வடிவில் இருக்கிறார். பன்னிருகால் மண்டபத்தில் ஒரு சுற்றுப் பிராகாரமும் பக்தர்கள் உட்கார்ந்து ஆண்டவனைத் தியானிக்க வழிபாட்டுக் கூடமும் இருக்கின்றன. ஜோதி தரிசனம் ஆனதும் பக்தர்களுக்குத் திருநீறு பிரசாதமும் மலர்களும் கற்கண்டும் தரப்படுகின்றன.
சித்திவளாகம்
வடலூருக்கு அருகே மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது சித்திவளாகம். வள்ளலார் ஏற்றிவைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. வள்ளலார் ஸித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து தியானம் செய்யலாம்.
தினமும் இங்கே திருவருட்பா பாடல்களை அன்பர்கள் பாடிப் பிரார்த்தனை செய்கின்றனர். மாதா மாதம் பூச நாட் களில் அன்னதானம், சிறப்புவழிபாடும் நடைபெறுகின்றன. தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையை ஜன்னல் வழியாகப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.
ஜோதி தரிசனம்
ஞானசபையில், 1872 ஆம் வருடம் ஜனவரி 25 ஆம் தேதி, தைப்பூசம் ஜோதி தரிசனம் நாளில் முதல் தடவையாக வழிபாடு தொடங்கப் பெற்று, ஜோதி தரிசனத்தை அனைவரும் கண்டுகளித்தனர். அது முதற்கொண்டு ஒவ்வொரு தைப்பூசத்திலும் முழுமையான தரிசனம் நடக்கிறது.
பௌர்ணமி முழு நிலவும் பூச நட்சத்திரமும் ஒன்றுசேரும் நாள்தான் தைப்பூச நாள். அந்த நாளில், நம் ஆன்ம சக்தியும் ஆழ்மனமும் உயர்நிலையை அடைகின்றன.
அருட்பெருஞ்ஜோதி தரிசன அனுபவத்தை அந்த நாளில் பெறுவது உகந்ததாக இருக்கும் என்பதுதான் இந்த நாளை வள்ளலார் தேர்ந்தெடுக்கக் காரணம். தைப்பூச நாளில் காலை 6.30, 10.00, மதியம் 1.00, இரவு 7.00, 10.00, மறுநாள் அதிகாலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
தவிர, இருபத்தேழு நாட்களுக்கு ஒருமுறை வரும் மாதாந்திர பூச நாளில், இரவு எட்டு மணி முதல் எட்டரை மணிவரை ஆறு திரைகளை விலக்கி, மூன்று முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
தைப்பூச ஜோதி தரிசனம்:
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஜோதிப்
சித்திவளாகத்தில் உள்ள அணையா ஜோதி.
பிரகாசம் இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், சுயநலம், பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது.
இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது, மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைத் தரிசிக்கிறான். ஜோதி தரிசனம் என்பதும் இதுபோலத்தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் ஜோதியைத் தரிசிக்க முடியும். கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள்!
மாயா சக்தி, கிரியா சக்தி, பராசக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, ஆதிசக்தி, சித்சக்தி என ஏழுவிதச் சக்திகளைக் கடந்துவிட்டால், ஜோதி வடிவிலான இறைவனைத் தரிசித்து, மரணமில்லாப் பெருவாழ்வை அடையலாம்.
ஞானசபையில் வழிபாடு தொடங்கியபோது, வள்ளலார் தன் கையால் ஒரு அகல்விளக்கை ஏற்றிவைத்தார். அது அணையாத்தீபமாக இன்றுவரை பராமரிக்கப்படுகிறது.
அந்தத் தீபம் ஆறேமுக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியில் பட்டு எதிரொலிப்பதே ஜோதி ஆகும். அந்தக் கண்ணாடி, வள்ளலாரால் நாற்பத்தெட்டு நாட்கள் விசேஷ வழிபாடு செய்யப்பட்டது.
எனவே, ஒவ்வொரு தைப்பூசத் திருநாளன்றும் சத்திய ஞானசபையில் இந்த ஏழு திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் நிகழும். இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பார்கள். இறைதரிசனத்தோடு, தங்களையே தாங்கள் தரிசித்துக் கொள்ளும் உணர்வு இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களுக்குக் கிடைத்து வருகிறது.
ஜீவகாருண்ய ஒழுக்கம்!
வள்ளலார் அறிவுறுத்திய ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் முக்கியக் குறிக்கோள், பிற உயிர்களின் பசியை ஆற்றுவது.
சத்திய தருமச்சாலை & வெளித்தோற்றம்
"ஜீவகாருண்ய ஒழுக்கமானது, மனிதருக்கு முக்தியை அருளும்" என்றார் அவர். ஜீவகாருண்ய வழியைக் கடைப்பிடிப்பது மிக எளிது.
"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது? பசியின் காரணமாக, மனிதர்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத் துணிவார்கள்? பசியினால் ஓர் உயிருக்கு உண்டாகும் வேதனைகள் என்னென்ன?" என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்த, பசியைப் பற்றி அணுஅணுவாக அலசி ஆராய்ந்திருக்கிறார். பசியைப் பற்றிய அவரது கருத்துகள் இங்கே:
பசி என்ற ஒன்று இருப்பதேன்?
பசியில்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியில்லாதபோது, ஒருவருக்கொருவர் உதவமாட்டார்கள். அப்படி உதவவில்லை என்றால், மனிதநேயம் இல்லாமல் போய்விடும்.
சத்திய ஞான சபை & வெளித்தோற்றம்
மனிதநேயம் இல்லாவிட்டால், கடவுள் அருள் கிட்டாது. எனவே, கடவுளை அறிய, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் உதவிக் கருவிதான் பசி! பசி என்பது என்ன?
பசி என்பது, ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு.
பசி என்பது, ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று.
பசி என்பது, ஏழைகளின்மேல் பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி.
பசி என்பது, உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.
பசி நோயினால் ஏற்படும் கொடுமைகள்!
பசி நோய் என்பது மிகவும் பயங்கரமானது. அந்நோயைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள். பெற்றவர்கள், பிள்ளைகளை விற்பார்கள். இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத் திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். பிள்ளைகள், பெற்றவர்களை விற்பார்கள்.
வள்ளலார் சந்நிதி
இதன் விளைவாக, வயதானவர்கள் பரதேசங்களில், பரவீடுகளில் கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்து, கூனிக் குறுக நேரிடும்.
வீடு, மாடு, நிலம், மற்ற உடைமைகள் அனைத்தையும் விற்று, மக்கள் பசிப்பிணியை அகற்றப் பார்ப்பார்கள்.
முனிவர்களையும் யோகிகளையும் சித்தர்களையும் கூடப் பசி தாக்கும். அச்சமயங்களில் அவர்கள் பிச்சை கேட்டு ஊருக்குள் நுழைவார்கள். பிச்சை கிடைக்காவிடில் சித்தம் கலங்குவார்கள்.
எந்நேரமும் காமத்தை விரும்பும் காமுகர்கள்கூடப் பசிப்பிணி தாக்கும்போது, காமம் மறந்து கலங்கு வார்கள்.
பசிப்பிணி தாக்கினால் என்னாகும்?
அறிவு மயங்கும்.
கடவுளைப் பற்றிய நினைப்பு அடியோடு ஒழிந்து போகும்.
சித்தம் கலங்கும்.
நம்பிக்கை குலையும்.
கண் பஞ்சடைந்து குழிந்துபோகும்.
காதில் இரைச்சல் ஏற்படும்.
நாக்கு உலர்ந்துபோகும்.
கை, கால் சோர்ந்து துவளும்.
வார்த்தை குழறும்.
வயிறு திகுதிகுவென எரியும்.
தாபமும் கோபமும் பெருகும்.
உயிர் விலகுவதற்கான அத்தனை அறிகுறிகளும் மேலும் மேலும் தோன்றும்.
நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய வேதனைகளும் ஒன்றுதிரண்டால் என்ன வேதனை உண்டாகுமோ, அதுவே பசி வேதனை.
பசி அகன்றால் அடையும் ஆனந்தங்கள்!
உணவு கிடைத்து, உண்டு பசியாறியவுடன், பசியால் நேர்ந்த அத்தனை துன்பங்களும் அகலும்.
தத்துவங்கள் மறுபடி தழைக்கும்.
உள்ளம் குளிரும்.
சித்தம் தெளியும். உள்ளேயும் வெளியேயும் உயிர்க்களை உண்டாகும்.
கடவுள் நம்பிக்கை துளிர்க்கும்.
உள்ளே... ஐம்பொன்னாலான திருவுருவம்
தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும்போது கொள்ளும் மகிழ்ச்சியைவிட, பசியால் வேதனைப்படுபவர்கள் உணவைக் காணும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள். உணவைக் கண்டவுடனேயே அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், அதை உட்கொண்டபின் அடையும் ஆனந்தம் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஆதலால், உணவைக் கடவுளுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பிற உயிர்களின் பசியாற்றி, ஒப்பில்லா திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்ல முடியும்?
இந்தப் புண்ணியத்தைச் செய்கிற புண்ணியர்களை, எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது?
இவர்களை, எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளின் அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.
ஜீவகாருண்யம் கடைப்பிடிப்பதால் வரும் நன்மை!
சூலைநோய், குஷ்டநோய் போன்ற தீராத வியாதிகளால் அவதிப்படும் இல்லறவாசிகள், அந்நோய்களிலிருந்து விடுபடுவார்கள் என்பது சத்தியம்.
பல நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தம் கொண்டவர் களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும்.
தனக்கு அற்ப ஆயுள் என்றுஜோதிடம் மூலமாகவோ, மருத்துவம் மூலமாகவோ அறிந்து, மரணத்துக்குப் பயந்து கலங்கு கிறவர்களுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
கல்வி, அறிவு, செல்வம், போகம் ஆகியவற்றில் குறை உள்ளவர்கள், பசித்த ஏழைகளின் பசியாற்றினால் கல்வி, அறிவு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கவல்ல போகங்கள் அனைத்தும் கிட்டும்.
வள்ளலார் ஸித்தி அடைந்த வளாகம்.
பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகக் கொண்ட மக்களுக்குக் கோடையில் வெயில் வருத்தாது. மண்ணும் சூடு செய்யாது. பெருமழை, பெருநெருப்பு, பெருங்காற்று ஆகியவற்றால் துன்பம் உண்டாகாது.
கள்வர்களாலும் விரோதிகளாலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.
அரசாங்கத்தால் அவமதிக்கப்பட மாட்டார்கள். சிறைவாசம் போன்ற கொடுமைகள் நேரிடாது.
வயல்களில் முயற்சி இன்றியே விளைச்சல் பெருகும்.
வியாபாரத்தில் தடையின்றி லாபம் கிடைக்கும்.
கனவில் சென்று கட்டளையிட்ட பெருமான்!
ஒரு சமயம் தருமச்சாலையில், மறுநாள் அன்னதானத் துக்குத் தேவையான அரிசி இல்லை என்ற நிலை. செய்தியைப் பணியாளர்கள், வள்ளலாரிடம் தயக்கத்துடன் கூறினர். வள்ளலார் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானம் செய்தார். தியானம் முடிந்தபின், அரிசியும் மற்றவையும் நாளைக்கு வரும் என்று கூறினார்.
இந்த ஜன்னலை தைப்பூசம் அன்று திறப்பார்கள்...
மறுநாள் பொழுது புலர்ந்து கொண்டிருக்கும்போதே திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில் அரிசியும் பிற உணவுப் பொருட்களும் தருமச்சாலைக்கு வந்து சேர்ந்தன. அவற்றைக் கொண்டு வந்தவர் வள்ளலாரிடம் அன்பு பூண்ட அன்பர் ஒருவர். முதல் நாளிரவு கனவில், வள்ளலார் வந்து அரிசியையும் மற்றவற்றையும் கொண்டு வந்து தருமாறு கூறியதாகவும், அதை உத்தரவாக எண்ணி உடனே வண்டி கட்டிக்கொண்டு கிளம்பி வந்ததாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.
உடல் வேறு உயிர் வேறு!
வள்ளலார் தருமச்சாலையின் வெளியே உச்சிப்பொழுதில் வெயிலில் அமர்ந்து தியானத்தில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் வள்ளலாரின் தலைக்கும் சூரியனுக்கும் இடையே ஓர் அக்னிக் கம்பம் இருப்பது போல் தோன்றும். இது அனைவருக்கும் பழக்கப்பட்ட காட்சியாக இருந்திருக்கிறது. இதைவிட இன்னொரு காட்சிதான் வள்ளலாரை வெறும் துறவியாக மட்டுமின்றி மாபெரும் சித்தராக உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஒருநாள் உச்சிவேளையில் தருமச்சாலையில் இருந்து வள்ளலார் வெளியே புறப்பட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், கவலைப்பட்ட சண்முகம் பிள்ளை என்னும் அன்பர் வெளியே வந்து தேடினார்.
ஓரிடத்தில் வள்ளலாரின் கை, கால் என்று அனைத்து அங்கங்களும் வெவ்வேறாகிக் கிடப்பதைக் கண்டு பயந்து பதறி மயங்கி விழுந்தார் அவர். உடனே வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம் ஒன்றாகி, சண்முகம் பிள்ளையை எழுப்பி, "இனி இப்படி என்னைத் தேடி வர வேண்டாம்!" என்று கூறி அவருடன் தருமச்சாலைக்குத் திரும்பினார்.
பெய்யெனப் பெய்த மழை!
கோடைகாலத்தில் தருமச்சாலைக்கு வந்தவர்களில் பலர் மழையில்லாத காரணத்தால் பயிர்கள் எல்லாம் வாடுகின்றன என்றும் கால்நடைகளும், மக்களும் பல துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் வள்ளலாரிடம் முறையிட்டனர்.
இந்தக் கதவு வழியே சென்று உள்ளே ஸித்தியடைந்தார். ஒரு செம்பு நீரைத் தனது காலில் ஊற்றும்படி கூறினார் வள்ளலார். அன்பர்களும் அவ்வாறே செய்தனர்.
என்ன ஆச்சரியம்! சற்று நேரத்தில் மேகங்கள் திரண்டு நான்கு அங்குல அளவுக்கு மழை பெய்தது.
அது கேட்டு புதுப்பேட்டை என்னும் ஊரில் உள்ள அன்பர்கள் வடலூருக்கு வந்து தங்கள் ஊரிலும் மழை இல்லாதது சொல்லி வள்ளலாரை அழைத்தார்கள். வள்ளலார் அங்கு சென்று ஆறு குடம் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றுமாறு கட்டளையிட்டார். ஊர் மக்களும் அவர் சொல்படி செய்தனர். அவ்வளவுதான்! புதுப்பேட்டை கிராமத்தில் தண்ணீர் பொங்கியது. ஆறு, கிணறுகளில் நீர் நன்கு ஊறிப் பெருகியது. நீரின் சுவையும் கூடியது. ஊரில் நல்ல மழையும் பொழிந்து செழித்தது.
வள்ளலார் வரவழைத்த தீஞ்சுவை நீரோடை
சித்திவளாகத் திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காணவருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது. அது முதல் அந்த நீரோடை "தீஞ்சுவை நீரோடை" என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும், அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன. வள்ளலார் கரம்பட்டதும் சாதாரண நீரோடை, சக்தி வாய்ந்த நீரோடை ஆகிவிட்டது.
பாடல்களில் வாழ்கிறார்!
வள்ளலார் உருவாக்கிய தீஞ்சுவை ஊற்று...
வள்ளலார் தமது வாழ்வின் நிகழ்வுகள் அத்தனையையும் பாடல்களாகப் பாடி இருக்கிறார். ஒரு சமயம் இறைவன் தன் துணைவியுடன் இரட்டைக் குதிரை பூட்டிய வண்டியில் வள்ளலார் இருக்குமிடத்துக்கு வந்து அருள் புரிந்ததையும், அப்போது தன்னைத் தேடிவந்தவர் யாரோ, எவரோ எனப் புரியாமல் வாசலருகிலேயே கதவின் தாழ்ப்பாளைப் பற்றிக்கொண்டு பயத்துடன் நின்று பார்த்ததையும் வள்ளலார் பாடல் வடிவில் கூறியுள்ளார்.
அந்தப் பாடல்;
எருதின் உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன் இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும் ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனை வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே மணியே என் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
இதே போல அவர் இறுதியாக சித்திவளாகத்தில் இருந்த போது இறைவன் அவரை ஆட்கொண்டதையும் பாடலாகப் பாடியிருக்கிறார்.
அந்தப் பாடல்:
வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையினூடே திருவடிசேர்த் தருள்எனச் செப்பிவருந் திடவும் நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என் ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன் உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.
ஒரு கேள்வியும் வள்ளலாரின் பதிலும்!
கேள்வி: மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே... அவற்றை இம்சை செய்து ஆகாரமாக உட்கொண்டால், உயிர்க்கொலை செய்து உண்பது போல்தானே ஆகும்?
வள்ளலாரின் பதில்: மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். ஆனால், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துகள் வெறும் சடங்களே. அவ்வித்துகளை நாமே விதைத்து, உயிர் விளைவு செய்ய முடியும். அப்படி நாமே விளைவு செய்த அந்த உயிர்களைக் கொல்லாமல், அந்தத் தாவரங்களில் உயிரின்றி, உயிர் தோன்றுவதற்குத் தகுதியுள்ள சடங்களான வித்துகளையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையுமே ஆகாரமாகக் கொள்கிறோம். தாவரங்களை வேருடன் பிடுங்கி ஆகாரமாகக் கொள்வதில்லை.
வளர்ந்த தாவரங்களின் விதைகள், காய், கனிகள் முதலானவற்றைப் பறிக்கும்போது, மனிதர்களின் நகம், ரோமம் ஆகியவற்றை அகற்றும்போதும் துன்பம் உண்டாகாதது போல் தாவரங்களுக்கும் துன்பம் உண்டாவதில்லை.
மேலும், தாவர வர்க்கங்களுக்கு மனம் முதலியன வளராததால், அது உயிர்க்கொலையும் அல்ல; துன்பம் உண்டுபண்ணுவதும் அல்ல. எனவே, இது ஜீவகாருண்ய விரோதமாகாது.
சித்த மருத்துவர் வள்ளலார்!
பல மூலிகைகளின் குணங்களை அட்டவணையாக எழுதியிருக்கிறார். சஞ்சீவி மூலிகைகள் பலவற்றைப் பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறார். சஞ்சீவி மூலிகைகளின் துணைகொண்டு இறந்தவர்களை மறுபடி உயிர்ப்பிப்பது எப்படி என்று எழுதியிருக்கிறார்.
அங்கங்கள் துண்டுகளாக வெட்டுப்பட்டால், அவற்றை மீண்டும் இணைக்க எந்த மூலிகையை உபயோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
வலுவான, திடமான சரீரத்துக்கும் நீரிழிவு நோய்க்கும் அவர் கூறும் மருத்துவக் குறிப்பு இதோ:
நீரிழிவு நோயை வேரறுக்கும்
ஓமம் = 50 கிராம்
சீரகம் = 50 கிராம்
கருஞ்சீரகம் = 50 கிராம்
வெந்தயம் = 100 கிராம்
வாணலியில் இவற்றைத் தனித்தனியாக வறுத்துப் பின் எல்லாவற்றையும் நன்றகாகக் கலந்து அரவையில் பொடி செய்யவும். தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி வாயில் போட்டுக் கொண்டு தண்ணீரோடு விழுங்கி விடவும், 15 நாட்கள் கழித்து சர்க்கரை அளவு வெறும் வயிற்றிலும், சாப்பிட்டு 2 மணி நேரங் கழித்து பரிசோதனை செய்து பார்க்கவும், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும், அல்லோபதி மருந்துகளின் அவசியம் இருக்காது.
ஓமம் = ஓம் = சுத்த சிவம் சீரகம்,
கருஞ்சீரகம் = அஹம் = ஆண்பெண் ஓர்மை சத்தி சுயம்
வெந்தயம் = தம் = சுத்த சிவ சத்தி சுய சமேத சற்குரு மகாபதம்.
திரிதோஷம் நீக்கிச் சச்சிதானந்தத்
திரிமூல ஞாபக மூட்டும் ஓமம்
கருவெண் சீரகம் வெந்தயம் மூன்றும்
குருவாழ் மார்பகம் வெளிப்படும் பூரணம்
ஓமத்தில் ஓமுண்டு
கருவெண் சீரகத்தில் அகமுண்டு
வெந்தயத்தில் ஆனந்தம்முண்டு
சாரத்தில் ஏற்றிப் பாரத்தைக் குறைக்கும்
ஓமம் கருவெண் சீரகம் வெந்தயம் உண்.
வலுவான, திடமான சரீரத்துக்கு
கெட்டி மிளகு அரைகிலோ எடுத்துக்கொண்டு, அதைப் பேயன்வாழையின் கிழங்குச் சாற்றில் மூன்று நாள் ஊறவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவில் ஊறவைத்துப் பகலில் நிழலில் காயவைக்க வேண்டும்.
வள்ளலார் நினைவிடம் மருதூர்
இந்த முறையைப் பின்பற்றி, வாழைக் கிழங்கின் சாறில் ஊறவைத்து, நிழலில் காயவைத்த மிளகை, அதன்பின் இளநீரில் மூன்று நாள், கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் மூன்று நாள், பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் மூன்று நாள், பசுங்கோமயத்தில் மூன்று நாள், பசும்பாலில் மூன்று நாள் எனத் தனித்தனியாக இரவில் ஊறவைத்து, பகலில் நிழலில் காயவைத்து, தேய்த்துப் புடைத்து எடுத்து வைத்துக்கொண்டு, தினம் காலையில் ஐந்து மிளகுகளை உட்கொண்டால் வலுவான, திடமான சரீரம் அமையும்.
ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி
Dr Star Anand ram