வரலட்சுமி நோன்பு

வரலட்சுமி நோன்பு

வேண்டிய வரத்தை உடனே தரும் ‘வரலட்சுமி நோன்பு’ 20/08/2021 அன்று மிக எளிமையாக எப்படி மேற்கொள்வது? புதிதாக விரதம் இருப்பவர்கள் இதை செய்யலாம்.

வரலட்சுமி நோன்பு யாரெல்லாம் இருக்கலாம்? வரலட்சுமி நோன்பு என்றாலே கோலாகலத்துடன் பிரம்மாண்டமாக கொண்டாட கூடிய ஒரு நோன்பு நாள் என்றே சொல்லலாம். ஆனால் புதிதாக கடைப்பிடிக்க விரும்புவோர் மற்றும் எளிமையாக கடைபிடிக்க விரும்புவோர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். எளிதாக வரலட்சுமி நோன்பை கடைப்பிடிப்பது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வரலட்சுமி நோன்பு முதன் முதலாக அன்னை பார்வதி தேவி ஈசனின் சொற்படி மகாலக்ஷ்மியை வேண்டி விரதம் பூண்டாராம். அதனால் தான் முருக அவதாரமும் நிகழ்ந்ததாக புராண வரலாறுகள் குறிப்பிடுகின்றன. தோஷங்கள் நீங்கவும், மாங்கல்ய பலம் ஒரு பெண்ணிற்கு எப்போதும் நிலைத்திருக்கவும், வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கவும், பிள்ளை வரம் வேண்டுவோரும் இந்த நோன்பை ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிக சக்தி வாய்ந்த இந்த நோன்பை நீங்களும் வீட்டிலேயே எளிமையாக செய்வது சிறந்த பலன்களை தரும்.

வரலட்சுமி நோன்பு (தமிழில்:வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்கள் நோன்பு இருத்தலாகும். ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை அன்று வரும் வரலட்சுமி நோன்பை கடைப்பிடிப்பதற்கு நாம் வியாழக்கிழமையே அதாவது அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைக்க வேண்டியது அவசியம். பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நீங்கள் முன்னரே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். நாம் இப்போது எளிமையாக செய்வதால் நமக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்த்துக் கொள்வோம்.

வரலட்சுமி நோன்பு கடைப்பிடிப்பதற்கு தேவையான பொருட்கள்:
மஞ்சள், குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், கலசம், நெல், பச்சரிசி, எழுமிச்சை பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழை இலை, பூ, உதிரிப்பூக்கள், அட்சதை, நோன்பு கயிறு, துளசி இலைகள், கற்கண்டு, பச்சை கற்பூரம், பழ வகைகள் – குறிப்பாக வாழைப்பழம், ஆப்பிள், விளாம்பழம், ஆரஞ்சு, திராட்சை போன்றவை தேவை.

வரலட்சுமி நோன்பு இருக்க போகிறவர்கள் விரதம் மேற்கொள்வதற்கு தகுதியான ஆரோக்கியத்தை கொண்டிருக்க வேண்டும். ஒரு நாள் முழுக்க உபவாசமிருந்து நைவேத்தியங்கள் செய்து மகாலட்சுமியை நினைத்து, ஸ்தோத்திரங்கள் படிப்பது சாதாரண விஷயம் அல்ல. விரதம் அனுஷ்டிக்க உபவாசம் இருப்பது மிகவும் அவசியம். உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் தாராளமாக எடுத்துக் கொண்டு வேற எதுவும் சாப்பிடாமல் அன்றைய நாள் விரதம் இருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை, தோஷமும் இல்லை. பூஜை முடிந்ததும் இரவில் உண்ணா விரதத்தை கலைக்கலாம்.

வரலட்சுமி நோன்பு விரத முறை:
பூஜை செய்வதற்கு உங்கள் வீட்டில் கிழக்கு திசை ஈசானிய மூலையில் மண்டபம் அமைக்க வேண்டும். உங்களிடம் மண்டபம் இல்லை என்றால் பலகை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். தரையிலும், மண்டபத்திலும் அல்லது பலகையிலும் அரிசி மாவால் கோலம் போட வேண்டும். பலகையின் மீது வாழை இலையை விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மேல் நெல் அல்லது பச்சரிசி பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய தாம்பூலத் தட்டு வைத்து அதில் பச்சரிசியை பரப்பி கொள்ளுங்கள் அதன் மேல் கலசத்தை மஞ்சள் தடவி நான்கு புறமும் சந்தன, குங்குமம் இட்டு வைக்க வேண்டும்.

கலசத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பச்சை கற்பூரம் மற்றும் துளசி இலைகளை சேர்த்து தீர்த்தமாக செய்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ரூபாய் நாணயம், ஐந்து ரூபாய் நாணயம், உங்களிடம் இருக்கும் தங்கம், வெள்ளி நகைகள் போட்டுக் கொள்ளலாம். கலசத்தின் மீது மாவிலை கொத்தை வைத்து அதன் மீது மஞ்சள் தடவிய முழு தேங்காயை வைக்க வேண்டும். தேங்காய்க்கும் சந்தன, குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். எடுத்து வைத்திருக்கும் அட்சதையை சிறிதளவு தேங்காயின் மேல் தூவி கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்கு கலசம் தயாராகி இருக்கும். இந்த தேங்காய்க்கு மேல் அம்மன் முகத்தை வைத்து நாம் எளிதாக கட்டிக் கொள்ளும் படியாக நிறைய வடிவங்களில் அம்பாள் முகம் கடைகளில் இப்போது கிடைக்கிறது. இப்படி அம்பாள் முகம் வைத்தால் அம்பாளுக்கு உங்களுக்கு என்னவெல்லாம் அலங்காரம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை ஒரு மணப்பெண்ணுக்கு செய்வது போல் உங்களுக்கு பிடித்தபடி நீங்கள் செய்து கொள்ளலாம். முகம் வைக்காதவர்கள் தேங்காயை அம்பாளாக பாவித்து அப்படியே வணங்கலாம்.

பின்னர் ஒரு வெள்ளை நூல்கண்டு எடுத்துக் கொண்டு ஒன்பது நூல்களாக சரி சமமாக சரடாக கத்தரித்து திரியாக திரித்து மஞ்சள் தடவி அதில் ஒன்பது முடிச்சுகள் போட்டுக் கொள்ளுங்கள். வீட்டில் எத்தனை பெண்கள் இருக்கிறார்களோ அத்தனை நோன்பு கயிறு தயார் செய்து கொள்ளுங்கள். இது அஷ்டலட்சுமிகளையும் ஒன்றாக இணைத்து கட்டிக்கொள்ள இருக்கும் நோன்பு கயிறு ஆகும். மிகவும் சக்தி வாய்ந்த கயிறாக இந்த கயிறு பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் சிகப்பு நூலில் பஞ்சுபோல் இருக்கும் பிரத்தியேக நோன்பு கயிறு வாங்கி வைத்திருப்பார்கள். அது கைகளில் கட்டிக் கொள்ளலாம். ஆனால் நோன்பு கயிறு என்பது திருமணம் ஆன பெண்கள் பூஜை முடிந்ததும் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். திருமணம் ஆகாத பெண்கள் வலக்கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

பூஜைக்கு தேவையான அத்தனை பொருட்களையும் முந்தைய நாளே தயார் செய்து வைத்து விட்டு நோன்பு அன்று காலையில் நல்ல நேரம் பார்த்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். அன்றைய நாளில் வீட்டுக்கு விலக்கான பெண்கள் செய்ய முடியாமல் போனால் அடுத்த வாரம் வெள்ளி அன்று செய்யலாம். காலையில் குளித்து முடித்துவிட்டு, நைவேத்யங்களை தயார் செய்ய வேண்டும். பின்னர் பூஜை ஆரம்பிக்கும் பொழுது முதலில் மஞ்சளை பிடித்து பிள்ளையாரை ஆவாகனம் செய்ய வேண்டும். பிள்ளையாருக்கு சந்தன, குங்குமம் இட்டு, பூ சாற்றி ‘ஓம் கம் கணபதயே நம’ இந்த மந்திரத்தை 3 முறை முதலில் உச்சரிக்க வேண்டும்.

அதன்பின் உங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு குலதெய்வ மந்திரம் தெரிந்தவர்கள் அதனை உச்சரித்து விட்டு இருபுறமும் இரண்டு குத்து விளக்குகளை ஏற்றி வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். நைவேத்யம் படைத்து, தூப தீபம் காண்பித்து, அட்சதை தூவி, உதிரிப் பூக்களை போட்டுக் கொண்டே ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரம் உச்சரிக்க வேண்டும்.

மந்திரங்கள் உச்சரித்த பின் பூஜை நிறைவடைகிறது. நீங்கள் இந்த கலசத்தை மாலையில் அல்லது மூன்றாவது நாளான ஞாயிறு அன்று கலைத்து விடலாம். கலசத்தில் இருக்கும் தீர்த்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றுங்கள். பூஜை நிறைவடைந்ததும் நோன்புக் கயிறை உங்கள் கணவரிடம் கொடுத்து கட்டிவிட சொல்லுங்கள். இந்த பூஜை அஷ்ட லட்சுமிகளையும் ஒரு சேர நினைத்து வேண்டிய வரம் வேண்டி விரதம் இருந்து வழிபடுவதாக ஐதீகம். இதனால் சகல செல்வ வளங்களும் நமக்கு கிட்டும். வேண்டிய வரம் உடனே கிடைக்கும் என்பார்கள். திருமணம் ஆகாத பெண்கள் நல்ல வரன் அமைய வேண்டியும், குழந்தை இல்லாத பெண்கள் பிள்ளை பேறு உண்டாகவும், திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் நீடிக்கவும் இந்த பூஜையை ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கிறார்கள். நீங்களும் வரலட்சுமி பூஜையை முறையாக வழிபட்டு வேண்டிய வரத்தை லக்ஷ்மி தேவி தாயாரிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

வரலட்சுமி நோன்பு சொல்ல வேண்டிய சூட்சும மந்திரம்

ஓம் ஸ்ரீம் லலிதம் லம்போதரம்

நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸

வாழ்க பணமுடன் 💸
ஸ்ரீ குபேர குருஜி
Dr.Star Anand ram
பணவளக்கலை
Akshyum Divine Center
www.drstaranandram.com
🕉🕉
https://www.youtube.com/user/MrStaranand

Back to blog