நவ கிரக பரிகார தமிழ் மந்திரம்

நவ கிரக பரிகார தமிழ் மந்திரம்

நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டவை நவகிரகங்கள். இந்த நவகிரகங்களின் ஆதிக்கத்தில்தான் பன்னிரண்டு ராசிகளும் அமைந்திருக்கின்றன. அதனால், பன்னிரண்டு ராசி அன்பர்களுமே இங்கே திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய கோளறு பதிகத்தின் பாடல்களைப் பாராயணம் செய்து, கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர்பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது

திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலாக வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் இசைஞானியார்.

இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார் என்பது தொன்நம்பிக்கை.

வாழ்நாள் முழுதும் தமிழகத்தின் பல்வேறு சிவத் தலங்களுக்கும் சென்று இறைவனைப் புகழ்ந்து இவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரத்தின் முதன் மூன்று திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன.

கிரகங்கள் ஒவ்வொருவரின் வினைகளையும் உரிய நேரத்தில் சேர்ப்பிக்கும் அஞ்சல் நிலைய அதிகாரிகள் (Post Masters). நம் தீவினைகளே நமக்கு துன்பத்தை ஊட்டுகின்றன; கிரகங்கள் அல்ல என்ற புரிதல் மிக மிக அவசியம்.

ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.

கோளறு பதிகத்தின் 11 பாடல்களின் பதங்களையும் முறையாகப் பிரித்து, பொருளையும் எளிமைப் படுத்தி பதிவேற்றம் செய்யப்டுள்ளது.

கிரக வழிபாட்டை தவிர்த்து இஷ்ட தெய்வத்தின் கருணையை மட்டுமே வேண்டுவோம். கிரகங்களுக்கு திருவிளக்கு ஏற்றுவதை விடுத்து தெய்வத்தின் பொருட்டு திருவிளக்கு ஏற்றுவோம். விதவிதமான கற்களை அணிவதால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை.

நற்கருமங்களை மிகுதியாகப் புரிவதும் இறை வழிபாடும் மட்டுமே சிறந்த பரிகாரம். (ஓம் நமசிவாய).

கோளறு பதிகம் (திருஞானசம்பந்தர் அருளியது):

முதல் பாடல்:

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.

இரண்டாவது பாடல்:

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.

மூன்றாம் பாடல்:

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.

நான்காம் பாடல்:

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.

ஐந்தாம் பாடல்:

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.

ஆறாம் பாடல்:

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.

ஏழாம் பாடல்:

செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.

எட்டாம் பாடல்:

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.

ஒன்பதாம் பாடல்:

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.

பத்தாம் பாடல்:

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.

பதினோறாம் பாடல்:

தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!

பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.

staranandram #God #Mantra #Prayer

Youtube Link: https://www.youtube.com/channel/UCplVHnB5-c5E-PeNvisI2jw

Facebook link- https://www.facebook.com/mrstaranand/

Twitter link - @STAR_ANAND

Instagram link - drstaranand

Helo Link - Dr.Star Anand ram http://m.helo-app.com/s/ZccRSsF

Our mail id - star.v4all@gmail.com

Our office Address:
குபேர குருஜி
Dr.Star Anand ram
AKSHYUM DIVINE CENTRE
347, KAMARAJAR ROAD
OPP TO ALOFT HOTEL
IOB BANK BUILDING BACKSIDE
UPPILIPALAYAM PO
COIMBATORE - 641015

Back to blog