சித்தர்கள் மந்திர ஜபம் செய்யும் முறை
- ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலையை பயன்படுத்தி ஜெபம் செய்ய வேண்டும்.
- வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் மட்டுமே மாலையை அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரலில் ஜபம்
செய்தால் பலன் இல்லை. - 108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும். மேலும் ராசி மண்டலத்தில் நட்சத்திரங்கள் அனைத்தையும் பிரிக்கும் பொழுது 108 பாகங்கள் உண்டாகிறது. ஜெப மாலையின் எண்ணிக்கை அதன் அடிப்படையில் அமையும். எண்ணிக்கை பெற்ற ஜெபம் பயனற்ற செயலாகும்.
- க்ருஷ்ண மணி என அழைக்கப்படும் 109 வது மணியை தாண்டக்கூடாது. மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும்.
- தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில் அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் மின்னூட்டம் ஏற்படும். அவை நமது உடலிலேயே தங்க வேண்டும். பூமியில் உடல் தொடாமல் இருக்க மின்கடத்தாப் பொருட்களான தர்ப்பை, கம்பளி துணியும் பயன்படும்.
வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யக்கூடாது. மேலும் தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளி துண்டின் மேல் ஓர் மெல்லிய வெள்ளைத் துணியை விரித்து அதன் மீது அமர்ந்து ஜெபம் செய்யவும்.
- ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை வெளியே தெரியாத படி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.
- பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.
- தீட்சை பெற்ற மந்திரத்தை சத்தமாக சொல்லக்கூடாது. உதடுகள் அசையக் கூடாது. மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். மானஸ ஜெபம் என்பார்கள். நாமாவளி மந்திரங்கள் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம். குருவிடம் பெற்ற தீட்சை மந்திரத்தை சப்தமாக ஜெபிப்பது, வெளி நபர்களுக்கு கூறுவது, எழுதிவைப்பது அனைத்தும் மந்திர யோகத்திற்கு எதிரான செயல்கள். இது போன்று செயல்பட்டால் மந்திரம் சித்தி ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.
- எந்த ஒரு செயலும் அதற்குறிய இடத்தில் செய்தால் சிறப்பாக நடைபெறும். உதாரணமாக சமையலறையில் உணவு தயாரிக்காமல் வேறு அறைகளில் சமைத்தால் பல அசௌகரியம் ஏற்படுவது இயல்பு. இது போல மந்திரஜெபம் செய்ய ஏற்ற இடம் என சில இடங்கள் உண்டு. இடத்திற்கு ஏற்றவாறு மந்திரத்தின் பலமும் , பலனும் வேறுபடும்.
வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்தால் 100 மடங்கு பலன்கிடைக்கும். ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன். மலை மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.
- சந்தியாகாலவேளை எனும் சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. இந்த காலகட்டத்தில் ஜெபம் செய்யாமல் மற்ற நேரங்களில் மந்திரம் அஜபமாக உருவாகும். கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்ய பன்மடங்கு பலன் ஏற்படும். மந்திர ஜெபம் செய்து வரும் பொழுது எளிமையாக ஜீரணமாகும் உணவு, மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படு ம்
- மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலான மந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியன ஆகும். சில மந்திரங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும், சில பகையை வெல்லவும் பயன்படும். நமது சித்தர்கள் இவற்றை மானிடர்களின் நலனைக் கருதியே வெளிப்படையாக வெளியிட்டனர்.
- மந்திரங்களை அமைதியான சூழ்நிலையில், உடல், மனம், ஆன்மா மூன்றையும் அந்த மந்திரத்தில் அந்த மந்திரத்திற்கு உரிய தெய்வத்தில், அல்லது தேவதையில் நிலைநிறுத்தி உரிய ஆசனத்தில் (பத்மாசனம், சுகாசனம் போன்ற) அமர்ந்து உரிய பூசைகளைச் செய்து உச்சரிக்க வேண்டும். மந்திரங்களை உச்சரிக்கும் போது உரிய விரிப்பில் (மான் தோல், புலித்தோல், உரிய மரப்பலகைகள், பட்டுத் துணி, தர்ப்பை, வெள்ளை வஸ்த்திரம்) அமர்ந்து உச்சரிக்க வேண்டும்.
- கண்டிப்பாக வெறும் தரையில் அமர்ந்து மந்திர உச்சாடணம் செய்யக் கூடாது. அதிகாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையான பிரம்ம முகூர்த்தத்தில் மந்திர உச்சாடனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். அப்படி முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அந்த நேரத்திற்கே மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும்.
- மந்திரங்களை உச்சரிக்கும் போது, 1. சத்தமாக, 2. உதடு மட்டும் அசைந்து, 3. சத்தமே வராமல் மனதிற்குள் என உச்சரிக்கலாம் இதில் மூன்றாவதாக சொன்ன முறையிலேயே அதிக பலன் உள்ளது. அதாவது உதடு, நாக்கு அசையாமல் மந்திரத்தினை மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும்.
- மந்திரத்தின் தன்மைக்கேற்ப திசையினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஞான மந்திரங்கள் வடக்கு நோக்கியும், இல்வாழ்விற்குரியன கிழக்கு நோக்கியும், அமர்ந்து உச்சரிப்பது சிறப்பு. குறைந்த பட்சம் மந்திரங்களை 108 முறை அவசரம் காட்டாது உச்சரிக்க வேண்டும். மனதிற்குள்ளேயே நாவசையாமல் உச்சரிப்பவர்கள் 54, 27 முறை உச்சரிக்கலாம். 16 தடவைக்கு குறையாமல் உச்சரிக்க வேண்டும்.
- மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக இருக்கும். பூசை அறையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது.
- யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு. அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணி புகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது.
- பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.
- மந்திரங்களைத் தெரிவு செய்யும் போது சாத்வீக மந்திரங்களாக இருப்பது நல்லது. மந்திர உச்சாடணம் செய்வதற்கு முன்னர் வினாயகரை முறைப்படி வழிபாடு செய்து எந்த தடங்களும் இல்லாமல் எடுத்த செயல் வெற்றிகரமாக முடிய அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பின்னர் தான் மந்திர உச்சாடண வழிபாடடினை ஆரம்பிக்க வேண்டும்.
- முதலில் மந்திரத்திற்குரிய தேவதையிற்கு மலர், தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்த பின்னர் மந்திரங்களை உருக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். உரிய எண்ணிக்கை உருக் கொடுத்த பின்னர் கற்பூர ஆரத்தி காட்டி பூசையினை நிறைவு செய்ய வேண்டும். உருக் கொடுக்கும் எண்ணிக்கையை மனதில் நிறுத்திக் கொள்ள உரிய ஜெப மாலையை உபயோகிக்கலாம். ஜெப மாலைகள் மந்திரத்தின் தன்மைக்கேற்ப ருத்திராட்சம், ஸ்படிகம், மிளகு, தாமரைக் கொட்டை, துளசி என மாறுபடும். ஜெப மாலையின் மணியின் எண்ணிக்கை 108 உடையதாக இருக்க வேண்டும்.
- மந்திரங்களை ஒரு குருவின் மூலமாக உபதேசம் பெற்று ஜெபிப்பதே சிறப்பு. தகுந்த குருவினால் மட்டுமே மேலே சொல்லப்பட்ட சகல விடயங்களிலும் சரியான வழியினைக் காட்ட முடியும்.
முறைப்படி மந்திர உச்சாடணம் செய்து வாழ்வில் சகல வளமும், சகல நலமும் பெறுவோமாக.