இசையெழுப்பும் அதிசய தூண்கள் இசைத்தூண்

இசையெழுப்பும் அதிசய தூண்கள் இசைத்தூண்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே

நம் முன்னோர்கள் இறையை உணர்ந்து இறையாய் வாழ்ந்தார்கள் அந்த இறை தன்மையுடன் அவர்கள் வாழ்ந்தார்கள் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் அவர்கள் செய்த அற்புதங்கள் கோடி கோடி
கோவில் தரிசனம் என்பது என் வாழ்வின் ஒரு அங்கம்.இறைவனை வணங்க மட்டும் அல்ல இறை தன்மையுடன் நமது முன்னோர்கள் உருவாக்கிய கலைகளை ரசிக்க உணர ரகசியங்களை கற்க
அதில் ஓன்று தான் இசை தூண் விஸ்வகர்மாக்கள் உருவாக்கிய இந்த அற்புதங்களுக்கு கோடானகோடி நன்றிகள்

சமீபத்தில் திருநெல்வேலியில் பணவளக்கலை பயிற்சிக்கு பிறகு காந்திமதி அம்மனையும் நெல்லையப்பனை தரிசிக்க சென்றேன் அப்போது அற்புதமான ஒரு சிற்ப தூணை கண்டேன் அதை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு

இசையெழுப்பும் அதிசய தூண்கள் இசைத்தூண்

நான்மறைகளும் சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வரம் வேண்டின. எனவே வேதங்கள் திருநெல்வேலியில் மூங்கிலாய் இருக்க இறைவன் லிங்கமாய் அமா்ந்தான் என்பது தலபுராணம். மூங்கில் காட்டினூடே பாற்குடம் சுமந்து சென்ற இராமக்கோன் என்கிற அன்பனை இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறி விட்டுப் பாலைத் தன்மேல் கவிழச்செய்து.அவனால் வெட்டுண்டு,காட்சியருளி வேணுவனநாதராகத் தோன்றிய பெருமையுடையது.தாருகாவனத்து முனிவா்களின் செருக்கை அடக்கிய கீா்த்தியுடைய கங்காளநாதாரின் பிச்சாடன மூா்த்தி கோலமும் புகழ் உடையது.இந்திரத்துய்மன் என்னும் அரசனுக்குத் துருவாச முனிவா் இட்ட சாபம் நீங்க உதவிய “கரிஉருமாறிதீா்த்தம்“ அமையப்பெற்ற சிறப்புடையது.

தமிழ்நாட்டில் குபேரலிங்கம் அமையப்பெற்ற மூன்று திருக்கோவில்களில் ஒன்றான இத்திருக்கோவிலின் குபேரலிங்க சந்நிதி.

பழந் தமிழர்கள் பெருமையை இன்று உலகம் உணரக்காரணமாக இருப்பவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கட்டிய கோயில்கள் தான். மெய்யுருகி, உடல்வருந்தி அவர்கள் படைத்த கற்சிலைகளுக்கு நிகரென்று இவ்வுலகில் எதுவும் இல்லை எனலாம்.

மீன் போன்ற கண்ணும் அக்கண்ணின் உள்ளே விழியும் விழியினருகே இருக்கும் நுண்ணிய நரம்பையும் கல்லில் வடிக்கும் ஆற்றல் கொண்டிருந்ததோடு மட்டும் அவர்கள் நின்றுவிடவில்லை யாழ் மீட்டுவது போல தட்டினால் சப்த ஸ்வரங்களை எழுப்பும் இசைத்தூண்களையும் திராவிட சிற்பிகள் வடித்துள்ளனர்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் மண்டபத்தின் அமைப்பு அற்புதமானது. இந்த மாபெரும் மண்டபத்தில் தான் மாநிலம் போற்றும் பாண்டியப் பண்ணிசைக்கும் தூண்கள் கெம்பீரமாக உயர்ந்து எழிலுடன் நிற்கின்றன. இங்கு கொல்லம் 721 ம் ஆண்டில் ஜெய துங்க நாட்டை வென்று மண் கொண்ட பூதள வீரசங்கிலி வீர மார்த்த வர்மன் திருப்பணியாக 64 கால்கள் கொண்டதாய் முன்பக்கம் இரு இசைத்தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இத்தூண்கள் மண்டபத்தையும் இக்கோயிலையும் அணி செய்பவை. இந்த இசைத்தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே பெருங்கல்லால் செய்யப்பட்டவையாகும். நடுவில் பெரிதாய் ஒரு தூணும் அதைச் சுற்றிலும் உருவிலும் திருவிலும் உயரத்திலும் வித்தியாசமான 48 சின்னஞ்சிறு தூண்களான உருட்டுக்கம்பிகளும் இணைக்கப்பட்டாற் போன்று செதுக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் முன்பக்கம் இவ்விதமான பண்ணிசைக்கும் இருதூண்கள் பாடிய மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இந்த அற்புதமான அழகிய இசைத்தூண்களில் காணப்படும் ஒவ்வொரு சிறிய உருட்டிலும் ஒரு சிறிய குச்சியைக் கொண்டு தட்டினால் ஒவ்வொரு சுரம் எழுமாறு இத்தூண்களை அமைத்திருப்பது வியப்பையும் மகிழ்ச்சியையும் எழுப்புகிறது. இம்மண்டபத்தை அமைத்தவன் கி.பி 7ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் செங்கோலோச்சிய கூன்பாண்டியன் என்று இவ்வூர் தல புராணம் கூறுகிறது. இம்மணிமண்டபத்தை அலங்கரிக்கும்இரு இசைத்தூண்களும் ஆழ்வார் திருநகரி இசைத் தூண்களை விட அழகாகவும் கம்பீரமாகவும் காணப்படுகின்றன. இதே போன்று இரு இசைத் தூண்கள் அம்பாள் சன்னதியிலும் உள்ளன. இவைகள் நான்கும் சிறந்த இசைத்தூண்களாய் அற்புத நாதத்தை அள்ளிச் சொரிகின்றன. தூணில் உள்ள சிறு உருட்டுக்கம்பிகளில் வெவ்வேறு சுரம் எழுவதற்கு நமது சிற்பிகள் கையாண்டிருக்கும் முறை எவரும் காண முடியாத ஒரு அலாதியான அரிய முறையாகும்.

உருட்டுக்கம்பிகள் ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய அணில் ஏறிப்பாய்வது போல் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தூணில் இருக்கும் அணிலை அடுத்த தூணில் இருக்கும் அணில் எட்டிப்பிடிக்க முயல்வது போல் இருக்கும். இது தொடர்பைக் காட்டச் சிற்பிகள் கையாண்டிருக்கும் அரும்பெரும் குழூக்குறியாகும். என்னே! இந்தப் பாண்டிய நாட்டுச்சிற்பிகள் கண்ட கல்லை கனிவிக்கும் கவினுறும் கை வண்ணம்!! இத்தூண்கள் ஏனைய தூண்களைப் போன்ற மேற்கூரையை மட்டும் தாங்கி நிற்கும் தூணாக நிற்கவில்லை. ஏழுஸ்வரங்களில் எழுப்பும் பண்ணிசைக்கும் பாட்டுத்தூண்களாக மட்டும் இலங்கவில்லை. எழில் மிக்க சிற்பச் செல்வங்களை உடைய சீரிய தூண்களாகவும் மிளிர்கின்றன. இது நல்ல அகலமும் உயரமும் உள்ளதாய் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றிலும் காணப்படும் பதும பந்தம், கலசம், தாடி, குடம், இதழ்முனை, பலகை, கண்டம், போதிகை, அதில் உள்ள மதனை, பூமுனை, நாணுதல், உறுப்புகளும் உச்சியலங்காரங்களும் பல்வேறு பூக்களும், யாழிகளும், பிறவும், சிற்பச்சிறப்பை மேலும் உயர்த்துகின்றன. இவ்விசைத்தூண்கள் கோயிலின் கவினுறு கலைத்தோற்றத்தைப் பூர்த்தி செய்யும் அணியில் தமது பங்கை குறைவற நிறைவேற்றும் குன்றாவிளக்காய் ஜொலிக்கின்றன

மேலும் பயணிப்போம் முன்னோர்களை
உணர்வோம்

வாழ்க நம் முன்னோர்கள்

நன்றிகள் கோடி ஜெய் ஆனந்தம்

Back to blog