அகத்தியர் அருளிய லலிதா நவரத்தின மாலை தினமும் பாராயணம் செய்தால் செல்வம் பெருகும்
காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
ஐந்து அறங்களையும் நன்கு புரியும் நலம் பூக்கும் சிரிப்பினையுடைய புவனேஸ்வரியின் மேல் இயற்றப்படும் இந்த நவரத்தின மாலை நூல் நன்கு அமைய கணநாயகனான யானை காக்குமே.
- வைரம்
கற்றும் தெளியார் காடேகதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
கற்க வேண்டிய நூற்கள் பலவும் கசடறக் கற்றப் பின்னும் அப்படிக் கற்றவர் தெளிவு பெறவில்லையாம். உலக இன்பங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு காட்டிற்குச் சென்று அதுவே கதியாய் இருந்து கண் மூடி நீண்ட நாட்கள் பெருந்தவம் செய்து தவவலிமை பெற்றவர்களும் தெளிவு பெறவில்லையாம். அவர்கள் நிலையே அப்படி இருக்க மிகத் தாழ்ந்த பிழைகள் பலவும் புரியும் ஏதாவது பேசவும் முடியுமோ? வயிரத்தால் செய்த படைவாளினை மிக வலிமை மிக்க பகைவர்களுக்கு எமனாகப் பற்றி எடுத்தவளே. அடியவர்களுக்கு என்றும் வற்றாத சுனையைப் போல் அருள் புரிபவளே. மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.
- நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத்திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மூலாதாரமெனும் சக்கரத்தில் ஒளிரும் குண்டலினி எனும் தீயே சரணம் சரணம். முடிவும் முதலும் ஆனவளே; முடிவும் முதலும் அற்றவளே சரணம் சரணம். அழகிய கிளியே சரணம் சரணம். என்றும் குறையாத ஒளிக்கூட்டமே சரணம். உன்னுடைய நீலத் திருமேனியையே தியானித்து மற்ற நினைவுகளே இன்றி அடியேன் நின்றேன். பாலா திரிபுரசுந்தரி எனும் வாலைக்குமரியே என் முன் வருவாய் வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.
- முத்து
முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கினை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
முப்பெரும் தேவர்களும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களும் குறைவறச் செய்யும் வண்ணம் அவர்களுக்கு அருளும் முதல்வியே சரணம். எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் விதையானவளே; அந்த விதையிலிருந்து விளைந்த எல்லாமும் எல்லாரும் ஆனவளே; சரணம் சரணம். வேதங்களின் முடிவான வேதாந்தமாம் உபநிடதங்களில் நிலைத்து வாழ்பவளே. உன்னிடம் தஞ்சம் என்று அடைந்த நான் உன் மகன்; நீ என் தாய். என்றும் அழியாத வரத்தை எனக்கருளவே வருவாய். மத்தில் அகப்பட்ட தயிரைப் போல் நான் அங்கும் இங்குமாக அலையும் வாழ்வை அடையாமல் என்றும் அழியாத வாழ்வை அருள்வாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.
(தத்தேறிய நான் - உன்னிடம் தத்தாக வந்த நான்; தஞ்சமாக வந்த நான்.)
- பவளம்
அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோர்
தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிருந்தாள்
மந்திர வேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
அந்தி வானம் அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை. சிந்தை நிரம்பும்படி, மகிழும் படி வளம் பொழிந்து இந்த உலகத்தை (பாரை) ஒரு தேன் காடாக இங்கே செய்தவள் யாரோ? அன்னையே! என் தந்தையாம் இறைவரின் இடப்பாகத்திலும் அவர் தம் மனத்திலும் / என் மனத்திலும் இருப்பாள். அவளை எப்போதும் எண்ணுபவர்க்களுக்கு என்றும் அருளும் எண்ணம் மிகுதியாகக் கொண்டாள். மந்திரங்கள், வேதங்கள் இவற்றின் உட்பொருளாவாள். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
- மாணிக்கம்
காணக் கிடையா கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித்திரு நாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
எளிதில் காணக்கிடைக்காத நற்கதியானவளே! எண்ணத்தில் எளிதில் கருத முடியாத கலை வடிவானவளே! அணிவதற்கு அரிதான அழகு அணியானவளே! கற்பனைக்கும் எட்டாத புதுமையானவளே! இவற்றை எல்லாம் செய்ய முயன்று முடியாமல் தம் குறைப்பாட்டை எண்ணி நாணி உன் திருநாமங்களையும் உன் துதிகளையும் யார் நவிலவில்லையோ அவர்களை நாடாதவளே! மாணிக்கத்தின் ஒளிக்கதிரானவளே! வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
- மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதிலயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பச்சை மரகத உருவையுடையவளே சரணம் சரணம். தேன் பொழியும் திருவடிகளை உடையவளே சரணம் சரணம். தேவர் தலைவன் உன் பாதங்களைப் பணிய திகழ்ந்திருப்பாய் சரணம் சரணம். சுதி, ஜதி, லயம் போன்ற இசை உறுப்புகளாய் இசைவடிவானவளே சரணம். ஹர ஹர சிவ என்று அடியவர் பாடிக் கொண்டு குழும அவர்கள் இறைவரின் அருள் பெறும் படி அருள் புரியும் அமுதமானவளே சரணம். ஒன்பது வித செல்வங்களானவளே சரணம் சரணம். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
.7. கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மரமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
பூமியில் பிறந்த நான் புரியும் எல்லா செயல்களும் எந்த வித குறைகளும் இல்லாமல் எல்லா பயன்களும் குறைவின்றி கிடைக்கும் வரமும், தியிலிட்டுப் பொசுக்கினாலும் 'ஜெய சக்தி' என்று உன் அருளில் உறுதி கொண்டு அடியேன் சொல்லும் வீரமும், தாயே நீ வந்து தருவாய். மோமேதகமே! குளிர் வான் நிலவே! குழலைப் போல் இனிய வாய்மொழியைக் கொண்டவளே! மாமேரு மலையில் வாழும் கிளியே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
- பது மராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராகவிகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
இன்பம் அருள்பவளே! இன்ப வடிவே! அழகிய கண்கள் உடையவளே! பதுமராகத்தின் ஒளியில் நிறைந்தவளே! அம்மா! நிலையில்லா மன நோய்களை நீக்குபவளே! அனைத்துக் கலைகளையும் அறிந்தவளே! சம்புவின் சக்தியே! நிலவை அணிந்தவளே! தலைவியே! கருநிறத் திருமேனியைக் கொண்டவளே! எல்லா வித அணிகலன்களும் அணிந்திருப்பவளே! மரணமிலா பெருவாழ்வின் உருவே! என்றும் மங்கலகரமானவளே! அழகிய மேருமலை சிகரத்தில் நிலைத்து வசிப்பவளே! மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
- வைடூர்யம்
வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையாரொலி யொத்த விதால்
நிலையற் றெளியேன் முடியத்தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற் றசைவற் றநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
நான் செய்த முன்வினைப்பயன்களோ வலையை ஒத்தது. என் மனமோ மானைப் போன்றது. அந்த மான் மருளும் படி அறையும் பறை போன்றவை உலக இன்ப துன்பங்கள். இப்படி வினை வயப்பட்டு இன்ப துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டு மானைப் போல் என் மனம் நிலையற்று எளியேன் அழிந்துப் போகலாமோ? இது தகுமோ? இவையெல்லாம் தூளாகப் போகும் படி வரம் தருவாய். அலைவற்று அசைவற்று இறை அனுபவம் பெறும் அடியார்களின் திருமுடியில் வாழும் வைடூரியமே! மலையத்துவச பாண்டியன் மகளே! மீனாட்சியே! வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.
பயன்
எவர் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வா ரவரே (மாதா)
{முற்றும்)