ஆடிப்பூரம் 2022

ஆடிப்பூரம் 2022

1.08.2022 ஆடிப்பூரம். உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம்.

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.அம்மன் பிறந்தநாள்

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.
ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.

மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம் எனக் கருதுவர். இந்நாளில் தேவி உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவாள் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆடிப்பூரத்தில்…வளையல் வழங்குங்கள்; சுபிட்சம் நிச்சயம்!

காத்தருளும் அம்பிகையைக் கொண்டாடும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில், ஆடிப்பூர நன்னாளில், அம்பாளுக்கு வீட்டிலிருந்தே பல வழிபாடுகளை செய்யலாம். அம்பாள் ஆராதனையை குடும்பத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் சேர்ந்து செய்யலாம்.

வீட்டில் அம்பாள் படங்கள் இருந்தால், விக்கிரகம் இருந்தால், பூஜையறையைச் சுத்தமாக்கிவிட்டு, விக்கிரகத்துக்கு நீராலும் பாலாலும் அபிஷேகம் செய்யுங்கள். விக்கிரகம் இல்லையென்றாலும் பரவாயில்லை. அம்பாள் படம் இருந்தாலே போதும். எந்த அம்பாள் படமாக இருந்தாலும் அம்மன் படமாக இருந்தாலும் சரி… ஒரு மணைப்பலகையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துவிட்டு, அதில் கோலமிடுங்கள். அதன் மீது அம்பாள் விக்கிரத்தை அல்லது படத்தை வையுங்கள். அம்பாளுக்கு சந்தனம் குங்குமமிடுங்கள்.

அம்பாளுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே அரளிப்பூக்களாலும் ரோஜாப்பூக்களாலும் தாமரை மலர்களாலும் அம்பிகையை அலங்கரியுங்கள்.
அம்பாளுக்கு, ஆடிப்பூரம் நாளில், அனைத்து சிவாலயங்களிலும் வளைகாப்பு திருவிழா விமரிசையாக நடந்தேறும். எனவே அம்பாளுக்கு வளையல் சார்த்துங்கள். முடிந்தால், வளையல் மாலை கோர்த்து அணிவியுங்கள்.

அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். அம்பாள் துதியைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் என ஏதேனும் இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.
பின்னர், வளையல் பிரசாதத்தை அக்கம்பக்கத்தில் உள்ள சுமங்கலிகளுக்கும் கன்யா பெண்களுக்கும் வழங்குங்கள். வளையலுடன் மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் பிட், வெற்றிலை பாக்கு என மங்கலப் பொருட்கள் வழங்குவது மாங்கல்ய பலத்தை வழங்கியருளுவாள் அம்பிகை. தடைப்பட்ட கன்னியருக்கு விரைவிலேயே கல்யாண வரம் தந்திடுவாள். வீட்டில் தரித்திர நிலையை மாற்றி, சுபிட்சத்தைத் தந்திடுவாள்.

தினம் 1.08.2022 ஆடிப்பூரம். அம்பாளைக்கொண்டாடுவோம். பெண்களுக்கு வளையல் பிரசாதம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்குவோம்.

Back to blog