1. பல வழிகளில் இருந்து (உதாரணமாக, சம்பளம், வட்டி, வாடகை போன்றவை) உங்களுக்கு வருமானம் வரலாம். அனைத்தையும் சமமாக நினையுங்கள். உங்களுக்குத் தேவையில்லாதப் பொருட்களை வாங்காதீர்கள். வாழ்க்கையானாலும் அல்லது பணமானாலும் திட்டமிடுங்கள், அதை ஓர் உள்ளார்ந்த தைரியம், அன்பு, கடமை உணர்ச்சியுடன் பின்பற்றுங்கள்.
2. முதலீட்டுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காதீர்கள். முதலீடு வேறு, பாதுகாப்பு வேறு. வீரன் எப்படி நாட்டைப் பாதுகாப்பானோ, அது போல உங்களையும், குடும்பத்தினரையும், உங்கள் சொத்தையும் அனைத்துவித தாக்குதலில் இருந்தும் காப்பது இன்ஷூரன்ஸ். தேவைக்கேற்ற மாதிரி யான இன்ஷூரன்ஸ் எடுங்கள்.டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால் குறைந்த பிரீமியம், அதிக கவரேஜ் கிடைக்கும். மணி பேக் பாலிசி’ எடுத்தால், அதன் மூலம் கிடைக்கும் ஆதாயம் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் சொற்பமே.இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிதி நிர்வாகத்தில் மிகவும் மோசமானவை.
3. எந்தவொரு சொத்து வாங்கும் போதும் அதன்மூலம் வருமானம் கிடைக்குமா எனப் பாருங்கள். சொத்து என்றைக்கும் பொறுப்பாக மாறக்கூடாது (உதாரணம், கடன் வாங்கி இடம் வாங்குவது. இதனால் கடனுக்கு வட்டி, சொத்து வரி எனக் கட்ட வேண்டிவரும். அந்தச் சொத்தை விற்றால் ஒழிய, உங்களுக்கு அதிலிருந்து வருமானமோ/ஆதாயமோ எதுவும் கிடைக்காது. அதை விற்பது வரை அது ஒரு 'டெட் அஸெட்’).
4. உங்கள் வருமானத்தைச் சரியான சொத்துகளில் முதலீடு செய்ய வேண்டும் (அதாவது, வங்கி டெபாசிட்டில் எவ்வளவு, பங்குகளில் எவ்வளவு, ரியல் எஸ்டேட்டில் எவ்வளவு போன்றவை). நீங்கள் பணத்தை மதித்தால் பணமும் உங்களை மதித்து உங்களிடமே பலமடங்காகத் திரும்பிவரும். 'அஸெட் அலோகேஷனில்’ நீங்கள் தெளிவாக இருந்தால் உங்களது வருமானம் அல்லது பணம் 90% சிறப்பாக நிர்வகிக்கப்படும்.
5. சேமிப்பையும், முதலீட்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள். செலவைக் குறைத்து சொத்தை நீங்கள் பெருக்கிக்கொள்ளலாம். ஆனால், அதன்மூலம் வரும்படிக்கு வழியிருக் கிறதா என்று பார்க்க வேண்டும்.அப்படி எதுவுமில்லை என்றால், அந்தச் சொத்தில் முதலீடு செய்வதில் உபயோக மில்லை. 'தேவையற்றதை வாங்குவதன் மூலம் தேவைப்படுவதை விற்க வேண்டிய கட்டாயம் பின்னாளில் ஏற்படக்கூடும்’ என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
6. ஏதேனும் சொத்தில் முதலீடு செய்யும்போது அதிலிருந்து தொடர்ந்து வருமானம் (running income) வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்பெகுலேட்டிவ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலீடு செய்யலாம். ஆனால், அது அளவோடு இருக்க வேண்டும். (தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு சிறந்தது அல்ல. அதற்கான பல காரணங்களில் ஒன்று, தங்கத்தின் விலை உலகளவில் நிர்ணயிக்கப்படுகிறது. டாலர்/ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் சாதகமாக இருப்பதில்லை.)
7. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பொறுமைகாக்க வேண்டியிருக்கும். அதுபோல, `Short term pain’-ஐ ‘long term gain’ ஆக்க பொறுமை அவசியம் தேவை. எது பங்கின் விலையைக் கூட்டுகிறது, குறைக்கிறது என்பதை நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். அதுபோல முதலீட்டுக்கும், ஊகத்துக்குமான வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். (an investor chases value while a speculator chases price
8. வீடு வாங்குவதாக இருந்தால், பிராபர்ட்டி மார்க்கெட் மலிவாக இருக்கும்போது வாங்குங்கள். அதேசமயம், வட்டி விகிதம் உச்சத்தை அடைவதற்கு முன்பாக நல்லதொரு வட்டி விகிதத்தை – 'ஃபிக்ஸட்' அல்லது ஃப்ளோட்டிங்’ – தேர்ந்தெடுங்கள்.
9. உங்கள் பணத்தின்மேல் குறியாக இருக்கும் அரசாங்கம் (பலவிதமான வரிகள் மூலம் உங்கள் வருமானத்தில் கைவைப்பது), வங்கிகள் (கடன் வழங்குவது, முதலீடு செய்யச் சொல்வது), புரோக்கர்கள் ஆகியோரை எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.சட்டப்பூர்வமான வழியில் அதிகப் பணம் ஈட்டி அதற்குக் குறைந்த அளவில் வரி கட்டுவது எப்படி என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
10. பணம் உனக்கு சுதந்திரம் அளிக்காது. மாறாக, அது உன்னை அடிமையாக்கும். எனவே, நீ பணத்தை ஆளுபவனாக இரு; அதைப் பார்த்து பயப்படாதே, அதற்குப் பின்னால் பேராசை பிடித்து ஓடாதே. நமது பிரச்னைகளுக்குத் தீர்வு நிதி பற்றிய அறிவுதானே தவிர, பணம் இல்லை’ என்று கூறுகிறார்.
ஆக, பணம் சம்பாதிப்பதைவிட பெரிய விஷயம் 'தீர்க்கமாகத் திட்டமிட்டுப் பணத்தைப் பெருக்கி’ அதை நமக்குச் சேவகம் செய்ய வைப்பதுதான். 'நாம் தேவையற்ற பொருட்களை வாங்கினால், விரைவிலேயே நமக்குத் தேவையான பொருட்களை விற்க நேரிடும்’ என்று நிதி உலகின் பிதாமகன் வாரன் பஃபெட் கூறியதை மனதில் வைத்துக்கொண்டு, அநாவசியச் செலவைக் குறைத்து அத்தியாவசியத்தில் முதலீடு செய்தால் நீங்களும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!