ஆடி அமாவாசையின் மகத்துவம்

ஆடி அமாவாசையின் மகத்துவம்

ஆடி அமாவாசையின் மகத்துவம்

வருகின்ற 28.07.2022 குருநாள் ஆடி அமாவாசை

முன்னோர் வழிபாடு!

இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்!

சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாட்களில், வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது. அதேபோல், சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்களும் சரி, பெண்களும் சரி, நெற்றிக்கு இட்டுக்கொள்ளக் கூடாது. இவை, இறைவனை வழிபட நாம் செய்யும் காரியங்கள். பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய இந்தக் காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம், தெய்வத்தை வழிபடும் வேளையில், பித்ருக்கள் வரப் பயப்படுவார்கள் என்கிறது சாஸ்திரம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர் எந்தத் திதியில் இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில் சிராத்தம் செய்ய வேண்டும். இறந்த நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில் செய்கிறார்கள். அதைத் தவிர்ப்பது உத்தமம். ஏனென்றால், அன்றைய தினம் திதி மாறி வர வாய்ப்பு உள்ளது. அதனால், இறந்த திதியில் சிராத்தம் செய்வதே சிறப்பு!

மனிதர்கள் தாம் வாழும் காலத்தில், தான தருமங்கள் செய்து வருதல் வேண்டும். நம்மைப் பெற்ற தாய், தகப்பன் உயிருடன் இருக்கும் காலத்தில், அவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதே மிகப் பெரிய தர்மம் ஆகும். இறந்த பின்பு செய்கின்ற தானத்தைவிட, இருக்கும்போது அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல ஆகாரம் கொடுப்பதே மிகப் பெரிய தர்மம் என்கிறது கருடபுராணம்.

பாபம் என்றால் என்ன, அது யாரைச் சேரும் என்பதைப் பற்றி நமது வேதங்களும், உபநிஷத்துகளும் விரிவாகச் சொல்லியிருக் கின்றன. பொய் பேசுதல், பிறர் பொருளை அபகரித்தல், அல்லது அபகரிக்க நினைத்தல் போன்றவை தீய காரியங்களாகும். இவை எல்லாமே பாபம் என்று கருடபுராணம் சொல்கிறது.

சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒன்றையே குறிப்பன ஆகும். நதிகள் பல இடங்களில் உற்பத்தியாகி, பல ஊர்களின் வழியாக வரும்போது, அவை ஆறு என்று பெயர் பெற்று சமுத்திரத்தில் கலக்கின்றன. அதுபோல், நாம் செய்கிற சிராத்தம், ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர் இறந்த திதியில் செய்யப்படுவது. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யப்படுகிறது. படையல் என்பது வருடத்துக்கு ஒருமுறை செய்யப்படுவது. ஆனால் இவை அனைத்துமே இறந்த முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிற சடங்குகள். இவை நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்வித்து, நமக்கு அவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது சத்திய வாக்கு.

நவீன உலகம், விஞ்ஞான யுகம், கணினி யுகம் என்று காலம் வேகமாக மாறிவிட்டது. 'என் வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது. தர்ப்பணம் செய்யவே நேரம் இல்லை’ என்று அங்கலாய்க்கிறார்கள் பலர். மாதத்தில் ஒரே ஒருமுறை வருகிற அமாவாசைக்கே இப்படிச் சொல்கிறார்கள். ஆனால், வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். ஆகவே, எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாமல், தட்டிக் கழிக்காமல் முன்னோரை உரிய காலத்தில் வழிபடுவது நமக்கு நன்மை பயக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இவை அனைத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும், ஆடி மாத அமாவாசை தர்ப்பணமும், தை மாத அமாவாசை தர்ப்பணமும் அவசியம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டிய சிராத்தம் விட்டுப்போனால் (தீட்டு ஏற்படுவதால்) மஹாளயபட்சம் அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இந்தப் புனிதமான தர்ப்பணங்களை உத்தராயன, தட்சிணாயன காலங்களில் செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.

ஆத்மகாரகனாகிய சூரியனும், மனோகார கனாகிய சந்திரனும் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இணைவார்கள். இதையே அமாவாசை என்கிறோம். சூரியன் என்பதை பித்ருகாரகன் என்றும், சந்திரன் என்பதை மாத்ருகாரகன் என்றும் சொல்கிறது ஜோதிடம். ஆகவே சூரியன், சந்திரன் இணைகிற அமாவாசையில், இறந்த தாய், தந்தை மற்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆராதிப்பது சிறப்பு என்கிறது சாஸ்திரம்.

கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

"தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை"

தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும் என்றுரைக்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மூதாதையர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் அவர் இப்படி உணர்த்தி சென்றுள்ளார்.

இந்த முன்னோர் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிப்பது அமாவாசை தினம். பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதால் நம் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஆடி அமாவாசையின் முக்கியத்துவம்:-

ஒரு வருடத்தில் ஆடி மாதம் முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் ஓய்வுக்குச் சென்றுவிடுவார்கள். அந்த நேரத்தில் நம்முடைய முன்னோர்கள் நம்மைக் காப்பாற்றுவதற்காக பித்ருலோகத்தில் இருந்து வரவேண்டும் என்பதற்காக நாம் அவர்களுக்கு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கிறோம். நம்முடைய தர்ப்பணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நம் முன்னோர்கள் புரட்டாசி மாத மகாளய அமாவாசையன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே, புரட்டாசி மாதம் நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பிறகு தை மாதம் அவர்கள் மறுபடியும் தங்களுடைய லோகத்துக்குத் திரும்புகிறார்கள். தேவர்களின் ஓய்வுக் காலத்தில் பூமிக்கு வந்து நம்மை ஆசிர்வதித்து காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்பும் விதமாக தை அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம்.

ஆடி அமாவாசை தர்ப்பணம்:-

பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம். அவ்வாறு இயலாத பட்சத்தில் வருடத்தின் முக்கிய அமாவாசை தினங்களான ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று தினங்களில் அவசியம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வகையில் நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி கூறும் வகையில் கொடுக்கப்படவேண்டிய தை அமாவாசை தர்ப்பணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

மக்கள் கூடும் தலங்கள்:-

ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள், தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ராமேஸ்வரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் இத்தர்ப்பணத்தை அளிக்க மக்கள் கூடுவார்கள்.

புனித நீராடல்:-

ராமேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோரின் திருவுருவச்சிலைகள், தை அமாவாசையன்று அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். இதே நாளில் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். அப்போது ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பிடித்த உணவு படையல்:-


திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் மாதம் தோறும் அமாவாசை தினத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க பக்தர்கள் வருவார்கள். மகாளய, தை அமாவாசையில் பக்தர்கள் கூட்டமாக திதி பூஜைகளை மேற்கொள்வார்கள். தை அமாவாசை தினத்தில் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, இரவு கோவிலில் தங்கி அடுத்த நாள் அதிகாலை கோவில் குளத்தின் கரையில் வாழை இலை போட்டு முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வழிபட்டு, பிண்டங்களை குளத்தில் கரைத்து வழிபாடுகளை பூர்த்தி செய்வார்கள்.

சூரியனின் கல்யாண விழா


இந்தியாவில் இரண்டே இரண்டு இடங்களில்தான் சூரியனுக்கு கோவில் உள்ளது. ஒன்று வடக்கே ஒடிசாவிலும் மற்றொன்று தெற்கே கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது. அங்கே சூரியபகவான் சாயா மற்றும் உஷா தேவியருடன் சிவசூரியன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சூரியனைச் சுற்றி மற்ற கிரகங்கள் அமைந்துள்ளன. சூரியனார் கோவில் எனும் இத்தலம் நவகிரகங்களுக்கென தனிப்பட்ட முறையில் அமைந்து இருப்பதால் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வருகிறார்கள். தை அமாவாசை தொடங்கி பத்து நாட்கள் சூரிய பகவானின் திருக்கல்யாண விழா இங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

லட்ச தீபம்


திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில் முழுவதும் ஒளிச்சுடர்களாக இருக்கும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

மோட்ச தீபம்


பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள பிதுர் கட்டத்திலும், அங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடி விட்டு, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பதாக ஐதீகம். விபத்துகளில் மரணம் அடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் துன்புறுவோருக்காகவும் அங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

தர்ப்பணத்திற்கு ஏற்ற தலங்கள்


அக்னி தீர்த்த கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்ச நதிக்கரை ஆகியவை பித்ரு பூஜைகளுக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவை தவிரவும் நமது பகுதிகளில் உள்ள பல்வேறு தலங்களிலும் பித்ரு கர்மாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

எப்படி செய்ய வேண்டும்?


மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து இந்த நாளில், ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோருக்கு திதி கொடுத்தல் , மூதாதையர்களுக்குப் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு உகந்த நேரம் மதிய வேளை. அதேபோல இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. அவ்வாறு இயலாத பட்சத்தில், பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, புத்தாடை முதலானவற்றை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை மற்றும். உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகும்.

மேலும் தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும். அன்று பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும். அதேபோல பித்ரு பூஜையைச் முழுமனதோடு, முறையாக செய்யாவிட்டால் முன்னோர்களின் சாபத்துக்கு உள்ளாக நேரிடும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.

தர்ப்பணம் முடிந்ததும், முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபடவேண்டும். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகச் சொல்லப்படும் காகத்துக்கு உணவு தரவேண்டும். உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் வழக்கமுள்ள உயர்ந்த குணம் கொண்டது காக்கை இனம். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே காகத்திற்கும் அமாவாசை தினத்தில் உணவளிப்பது சிறப்பு.

தை அமாவாசையன்று, முன்னோர்களின் பெயரால் பிறருக்கும் உதவிடுவோம், முன்னோர்களின் ஆசிகளுடன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோம்.

தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி ச்ராத்தமாஹூர் மநீஷிண:
-மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

“ இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

உலகில் மிகவும் ஆச்சர்யமான பிறவிகள் இந்துக்கள். முன்னோர்களை அவர்கள் வழிபடும் முறை தனிச் சிறப்புடைத்து. இவர்கள் போல இறந்து போனோரைக் கொண்டாடும் இனம் உண்டோ என்றில், இல்லை என்று பகர ஒரு நொடியும் தேவை இல்லை. பெரிய தலைவர்கள் இறந்தால் அடக்கம் நடைபெறும் போது 21 முறை பீரங்கிக் குண்டு வெடித்து மரியாதை செய்வர். இதற்கு கடற்படை சம்பிரதாயமே காரணம் என்று கலைக் களஞ்சியங்கள் செப்பும். பின்னர் ஆண்டுதோறும் அவர்கள் கல்லறைக்குச் சென்று மலர் தூவுவர். ஆனால் இந்துக்களோ ஆண்டுக்கு குறைந்தது 96 முறை வணங்குவர். ஆதிகாலத்தில் மூன்று வர்ணத்தாரும் செய்த இக்கடன் இப்போது குறுகிப்போய் ‘’பிராமணர் மட்டும்’’ என்று ஆகிவிட்டது. அதுவும் அருகிப் போய் 96 முறைக்குப் பதில் 12 அல்லது 24 முறை என்று சுருங்கிவிட்டது. காலத்தின் கோலம்!!

தினமும் முன்னோர்களை வழிபடும் வழக்கத்தைப் “பஞ்ச யக்ஞம்” என்ற தினசரிக் கடமைகளில் காண்கிறோம். அது என்ன வேள்வி?

திருவள்ளுவர் பதில் சொல்கிறார்:
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)

தென்புலத்தார்= தெற்கு திசையில் வசிக்கும் முன்னோர்கள்
தெய்வம்= கடவுள் என்பதன் சம்ஸ்கிருதச் சொல்
விருந்து = வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் (சாது, சந்யாசிகள்)
ஒக்கல் = சுற்றத்தார்,
தான் = தான் (அதாவது தனது சொந்தக் குடும்பம், அவர் வளர்க்கும் ஆடு, மாடு, மரத்தில் வசிக்கும் காக்கை, குருவி, வீட்டில் ஓடும் எறும்பு முதலியன. இதை பூத யக்ஞம் என்பர்= உயிரின வேள்வி)
என்று = என்ற
ஐம்புலத்து = ஐந்து இடங்களில் செய்ய வேண்டிய (பஞ்ச வேள்வி)
ஆறு= வழியினை
ஓம்பல் = பாதுகாத்தல்
தலை= சிறந்த அறம் ஆகும் (தர்மம்)
மனு ஸ்மிருதியில் 3-72 ஸ்லோகத்தில் கூறியதற்கும் இதற்கும் சிறிதும் வேறு பாடு இல்லை — மேலும் குறள் 41-ல்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)
என்பது மனு ஸ்மிருதியின் 3-78 ன் மொழியாக்கம் என்பதையும் இரண்டையும் கற்ற சான்றோர் உணர்வர்.

அதாவது கிருஹஸ்தன் என்பவன் வானப் ப்ரஸ்தம், சன்யாசம், பிரம்மசர்யம் என்ற மற்ற மூன்று நிலையில் உள்ளவர்க்கும் உதவுவதால் அதுதான் சிறந்த அறம் — கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மற்ற மூன்று நிலையில் உள்ளவர்களையும் ஆதரிப்பவர்கள் போற்றுதலுக் குரியவர்கள்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பிள்ளை பெறுவது எதற்காக என்று புற நானூற்றில் கோப்பெருஞ்சோழன் சொல்கிறான் — சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்த பல புலவர்களில் ஒருவர் பொத்தியார். அவருக்கு இடம் தர மறுத்த சோழ மன்னன் புதல்வன் பிறந்த பின் வருக — என்கிறான். புதல்வர் எதற்காக? பிண்டோதக் கிரியை என்னும் இறுதி யாத்திரைக் கிரியை செய்வதற்காகும் என்று உரைகாரர்கள் நவில்வர்.

உரைகாரர் சொன்னால் நாங்கள் நம்பவேண்டுமா? என்போருக்கு அகநானூற்றுப் புலவர் செல்லூர் கோசிகன் கண்ணனார் — (கௌசிக கோத்ரத்துதித்த கிருஷ்ணன் என்னும் புலவர்) — வாய்மொழியாக உண்மை அறிதல் நலம்:

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர்காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்” எனப்——— அகம்.66

பிள்ளைகள் இல்லாவிட்டால் நரகமா?


பிள்ளைகள் எள்ளும் நீரும் இரைத்து தர்ப்பணம், திதி முதலியவற்றைச் செய்தால் மறுமை இன்பம் கிடைக்கும் என்றால், பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாதோருக்கும், பிள்ளைகளே பிறவாதோருக்கும், இது பற்றி அறியாத ஜாதியினருக்கும் நரகம் வாய்க்குமா?

இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில் அவர்களுக்கும் சேர்த்து பிராமணர்கள் எள்ளும் நீரும் தெளித்து விடுகின்றனர். ஐயர்கள் சொல்லும் தர்ப்பண மந்திரங்களை அறிந்தோருக்கு இது தெள்ளிதின் விளங்கும் —( ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில் அண்ணா அவர்கள் எழுதிய தமிழ் மொழியாக்காத்தையும் உரையையும் அனைவரும் பயிலுதல் நன்று )

இதனால்தான் பிராமணர்களுக்குப் பொன்னும் பொருளையும் தமிழ் மன்னர்கள் வாரி வழங்கியதை சங்க இலக்கியத்திலும் 80,000 கல்வெட்டுகளிலும் காண்கிறோம்.

இதோ அவர்கள் சொல்லும் அற்புத மந்திரங்கள்:
எவர்களுக்குத் தாயோ தந்தையோ, சிநேகிதரோ, தாயாதிகளோ, பந்துக்களோ இல்லையோ — (தர்ப்பணம் செய்ய) — அவர்கள் எல்லாம் தர்ப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும்.

ஆகாய வழியாக வந்து இந்தத் தர்ப்பைப் புல்லில் எழுந்தருளுங்கள் என்று வேண்டும் போது அவர்கள் சொல்லும் மந்திரம் எல்லா இடங்களிலும் மங்களத்தையும் அமைதியையும் உண்டாக்கும்:

காற்று இனிமையாக வீசட்டும்
நதிகள் இனிமையைப் பெருக்கிக்கொண்டு ஓடட்டும்
செடி கொடிகள் இனிமை அளிக்கட்டும்
காடுகளில் உள்ள மரங்கள் இன்பம் தரட்டும்
சூரியன் மகிழ்ச்சி அளிப்பானாகுக
பசுக்கள் இனிமையான பாலைப் பொழியட்டும். (மதுவாதே ருதாயதே…..)

இவ்வாறு ஒரு ஆண் — தனது வம்சத்தில் பிறந்து இறந்த தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா ஆகிய மூவருக்கும் நீர்க்கடன் செலுத்திய பின்னர், தாயின் வம்சத்திலும் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா என்று எள்ளும் நீரும் இரைப்பர். இந்த ஆறு பேருடைய மனைவிமார்களும் இதே போல மரியாதை பெறுவர். எல்லோரும் இறந்து போயிருந்தால் இப்படி 12 பேருக்கும் வழிபாடு நடக்கும். இந்த அற்புத முறையை உலகில் வேறு எங்கும் காண முடியாது!!

இனி இந்துக்கள் – குறிப்பாக செய்ய வேண்டிய 96 இறந்தார் கடமைகளைத் தருகிறேன். (ஸ்ரீரங்கம் பி.ஜே.ஸ்ரீனிவாசன் எழுதிய நூலில் இருந்து)
அந்தக் காலத்தில் தீ மூட்டி சிரார்த்தமாக நடந்தவை பின்னர் காலத்தின் கோலத்தினால் நீர்க்கடனாக மாறியது. அதில் ஆண்டுக்கு குறைந்தது 96 முறை இதைச் செய்ய வேண்டும் என்று சான்றோர் எழுதிய சாத்திரங்கள் கூறும்:

12 மாதப் பிறப்பு தர்ப்பணங்கள்
12 அமாவாசை தர்ப்பணங்கள்
12 அஷ்டக தினங்கள் (மார்கழி, தை,மாசி,பங்குனி ஆகிய 4 மாதங்களின் சப்தமி,அஷ்டமி, நவமி தினங்கள்)
16 மஹாளய பட்ச தினங்கள் (சூரியன் கன்யா ராசியில் பிரவேசிக்கும் போது புரட்டாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் செய்யப்படும்)
4 யுக நாட்கள் (கிருத, த்ரேதா, த்வாபர, கலி யுகம் தொடங்கிய யுகாதி நாட்கள்)
14 மன்வந்தர நாட்கள் (14 மனுக்களின் ஆட்சி துவங்கிய நாட்கள்)
26 வ்யதீபாத—வைக்ருதி—விஷ்கம்ப தர்ப்பணங்கள் (27 வகை யோகங்களில் வ்யதீபாத யோகம் வரும் 13 + வைக்ருதி—விஷ்கம்ப யோகம் வரும் 13 தர்ப்பணங்கள்)
இது தவிர கிரகண காலங்களிலும் இறந்தோர் திதி வரும் நாட்களிலும் செய்வர்.

    -சுபம்-
Back to blog